மதுரை: மதுரையில் புத்தக திருவிழா இன்று மாலை தொடங்கி வரும் 15ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள அரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு புத்த திருவிழா தொடங்குகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை தொடங்கும் விழாவில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர். புத்தக திருவிழாவில் தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி உண்டு. இதில், 200க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் தினசரி மாலை 4 மணி முதல் 5 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் ‘சிந்தனை அரங்கம்’ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. உணவு அரங்கு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை அரங்குகளும் உள்ளன.
61ம் எண் அரங்கில் சூரியன் பதிப்பகம் மதுரை தமுக்கத்தில் இன்று தொடங்கும் புத்தக திருவிழாவின் 61ம் எண் அரங்கில், சூரியன் பதிப்பகத்தின் ஸ்டால் அமைந்துள்ளது. இங்கு ஆன்மிகம், மருத்துவம், வரலாறு, அறிவியல், இலக்கியம், சமையல், சினிமா, நாவல் என பலதரப்பட்ட அரிய வகை புத்தகங்கள் வாசகர்கள் தேர்ந்தெடுக்க வசதியாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. காலம்தோறும் படித்து காக்கும் பொக்கிஷமான இப்புத்தகங்களை, 10 சதவீத தள்ளுபடி விலையில் வாசகர்கள் வாங்கி செல்லலாம்.