10 ஆண்டுகள் எதுவும் இல்லாத நிலையில் மதுரைக்கு இப்போதுதான் விடிவு காலம்: செல்லூர் ராஜுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ செல்லூர் ராஜு (அதிமுக) பேசுகையில்,‘மதுரையில் கட்டப்பட்டு வரும் 2 மேம்பால பணிகள் எப்போது முடிவுறும். கடுமையான போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. எப்போது இதற்கு விடிவு காலம் பிறக்கும்,’ என்றார். இதற்கு பதிலளித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,‘மதுரைக்கு 10 ஆண்டுகள் விடிவுகாலம் இல்லாத நிலையில் இப்போது விடிவு காலம் பிறந்துள்ளது. முதல்வர் மதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் பாலத்தை பொறுத்தவரை அழகர் ஆற்றில் இறங்க கூடிய மண்டகப்படி இருக்கும் இடம் என்பதால் அந்த குழுக்களுடன் பேசி பணிகள் நடக்கிறது. இதேபோல், தேவர் சிலையும் உள்ளது. மழை புயல் போன்ற பாதிப்புகளும் உள்ள நிலையில், விரைவாக பணிகள் நடந்து வருகிறது. ஜனவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை அப்போலோ மருத்துவமனை மேம்பாலத்தை நவம்பர் மாதத்தில் திறக்க திட்டமிட்டு பணிகள் நடக்கிறது. விடிவு காலத்திற்குதான் மதுரைக்கு கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை முதல்வர் மேற்கொண்டு வருகின்றார்,’ என்றார்.