மதுரை: தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தாக்கப்பட்ட இளைஞர் மதுரை எஸ்பியிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தார். மதுரை பாரப்பத்தியில் கடந்த 21ம் தேதி நடந்த தவெக மாநாட்டில் விஜய் ரேம்ப் வாக் சென்றபோது, பவுன்சர்களால் கீழே தள்ளி விடப்பட்டதாக கூறப்படும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவை சேர்ந்த சரத்குமார் தரப்பில், விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது பெரம்பலூர் எஸ்பி அலுவலகம் மற்றும் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்துவிஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு சம்பவம் நடந்த பாரப்பத்தி அமைந்துள்ள மதுரை மாவட்டம் கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இளைஞர் சரத்குமார், தாய் சந்ேதாஷத்துடன் நேற்று மாலை மதுரை எஸ்பி அலுவலகத்திற்கு வந்து எஸ்பி அரவிந்திடம் சம்பவம் குறித்து விளக்கம் அளித்ததுடன், ஆவணங்களையும் கொடுத்தார்.
பின்னர் சரத்குமார் கூறுகையில், ‘‘மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரியலூரில் இருந்து அந்தியோதயா ரயிலில் மதுரைக்கு வந்தேன். விஜய்யின் பாதுகாப்பை மீறி நெருங்க முயற்சித்தாக தவெக தரப்பில் என் மீது புகார் அளித்தால் நான் அதை சந்திக்கத் தயார். எனக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை. மற்றவர்களுக்கு இதுபோல் நடக்கக்கூடாது என்பதற்காகத் தான் புகார் அளித்துள்ளேன். புகாரை வாபஸ் பெற வேண்டும் என தெரியாத நபர்களிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. என்னைப்போல் ஒருவர், நான் தான் அந்த இளைஞர் என பொய்யாக வீடியோ பரப்பி வருகிறார்’’ என்றார்.