Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் 19 மாதம் இழுத்தடிப்பு: கான்பூர், ஆக்ரா நகரங்களுக்கு ஒரு மாதத்தில் ஒன்றிய அரசு அனுமதி

மதுரை: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் முதல்கட்ட பரிசீலனையில் இருக்கின்றன. இன்னும் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்ட மதிப்பீடு தயாரித்து ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. திட்டத்துக்கான ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த ஜூலையில் திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதில்,. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து ஒப்புதல் அளிக்குமாறும் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.

இதற்கு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அளித்த பதிலில், ‘‘மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் முதல்கட்ட பரிசீலனையில் இருக்கின்றன. இன்னும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்படவில்லை’’ என தெரிவித்துள்ளது. கான்பூர், ஆக்ரா, சூரத், பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒரு சில மாதங்களிலேயே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 19 மாதங்களாகியும் ஒப்புதல் வழங்காதது ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கை காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதமே திட்ட அறிக்கையை ஒன்றிய அரசுக்கு மாநில அரசு மூலம் சமர்ப்பித்துள்ளோம். இதில் சில திருத்தங்களை ஒன்றிய அரசு கேட்டது. அதையும் சரி செய்து அனுப்பி விட்டோம்.

ஆனாலும், தற்போது வரை ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்காமல் தொடர்ந்து பரிசீலனையில் வைத்துள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மட்டும் கூடுதல் வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.