மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்கி, வரும் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி முதல் நாளான இன்று அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி (நவராத்திரி விழா), ஐப்பசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் சிறப்பானவை. இந்தாண்டு நவராத்திரி விழா இன்று தொடங்கி அக்.2 வரை நடக்கிறது.
இதையொட்டி கோயிலில் அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் மீனாட்சி அம்மன் தினசரி பல்வேறு அலங்காரங்களில் காட்சியளிப்பார். இதன்படி இன்று மாலை ராஜராஜேஸ்வரி அலங்காரம், நாளை (24ம் தேதி) வளையல் விற்ற அலங்காரம், 25ம் தேதி ஏகபாமூர்த்தி அலங்காரம், 26ல் ஊஞ்சல் அலங்காரம், 27ம் தேதி ரசவாத படல அலங்காரம், 28ம் தேதி ருத்ர பசுபதியார் திருக்கோல அலங்காரம், 29ம் தேதி தபசு அலங்காரம், 30ல் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், அக்.1ல் சிவபூஜை அலங்காரம், அக்.2ல் மீனாட்சியம்மன் விஜயதசமி சடையலம்புதல் அலங்காரத்தில் வீணை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி, சிவபெருமான் திருவிளையாடல்களை விளக்கும் வண்ணம் கொலுமண்டபத்தில் 21 அரங்குகள் அமைக்கப்படள்ளன. இந்த விழா நடைபெறும் 9 நாட்களும் மாலை 6 மணி முதல் மூலஸ்தான சன்னதியில் மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
நவராத்திரி நாட்களில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி மற்றும் 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆன்மிகச் சொற்பொழிவு, பரத நாட்டியம், வீணை இசைக்கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணைக் கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.