Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்

சென்னை : சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள நிலையில், அதற்கான நிதியை கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் மதுரை மற்றும் கோவையில் நாளை நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர்.சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகி வருகிறது. ரூ. 11,368 கோடியில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தொலைவுக்கு மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதேபோல் கோவையில் முதல்கட்டமாக அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய 2 வழித்தடங்களில் மொத்தம் 38 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10,740 கோடி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது. முதல் வழித்தடமாக உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து டவுன் ஹால், அவிநாசி சாலை வழியாக நீலாம்பூர் வரை 22 கிலோ மீட்டர் தூரத்துக்கும், இரண்டாம் கட்டமாக கோவை ரயில் நிலையத்திலிருந்து சத்தி சாலையில் கோவில்பாளையம் அருகேயுள்ள வழியாம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்க உள்ள பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் இன்று சென்னை வந்துள்ளனர். அவர்கள் நாளை மதுரையிலும் வியாழக்கிழமை அன்று கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள வழித்தடங்களில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து வங்கி பிரதிநிதிகளின் நேரடி ஆய்வுக்குப் பிறகு, வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு நிதித்துறை செயலாளரை சந்தித்தும் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

இதனிடையே மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை (DFR) மற்றும் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மெட்ரோ ரயில் நிறுவனம் அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், விரைவில் தமிழ்நாடு அரசு மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கு ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கும்.அதன் பிறகு ஒன்றிய அரசும் இத்திட்டத்தை தொடங்க ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்ட கட்டுமான பணிகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு சென்னை மெட்ரோ நிறுவனம் மூலம் முறையாக டெண்டர் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.