Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயர் கணவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயர் கணவரின் ஜாமீன் மனு தள்ளுபடியானது. மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய்க்கு வரி முறைகேடு நடந்துள்ளது. இவ்வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ள மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த் மற்றும் பில் கலெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி, மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி ஆஜராகி, ‘‘பொன்வசந்த் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முதல் மண்டலத்தில் பணியாற்றிய செந்தில்குமரன் என்பவரை மூன்றாவது மண்டலத்திற்கு உதவி வருவாய் அலுவலராக மாற்றியுள்ளார். ரவி என்பவரின் மனைவியை மேயருக்கு உதவியாளராக நியமித்துள்ளார்.

இவர்கள் மேலும் சிலருடன் சேர்ந்து பல வணிக கட்டிடங்களுக்கான வரியை குறைத்துள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தி, அதிக லாபம் பெற்றுள்ளனர். 5 மாடி கட்டிடத்திற்கான வரி பாக்கி ரூ.50 லட்சத்தை சரி செய்வதற்காக ரூ.11.25 லட்சம் வரை பெற்றுள்ளனர். ரவிச்சந்திரன் தனக்கு கீழ் ஒருவரை நியமித்து அவரிடம் கணினி ஐடி, பாஸ்வேர்ட் ஆகியவற்றின் மூலம் 33 பதிவுகளை மாற்றியுள்ளனர். இவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு அதிலுள்ள தொடர்பு கண்டறியப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரவேண்டும்.

விசாரணை நிலையில் உள்ளதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, பொன்வசந்த் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, உதவி கமிஷனர் சுரேஷ்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.