மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக 10 ஆண்டு நடந்த முறைகேட்டை விசாரித்தால் என்ன பிரச்னை? அதிமுக கவுன்சிலருக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற சொத்து வரி நிர்ணயம் தொடர்பான முறைகேடுகளை விசாரித்தால் உங்களுக்கு என்ன பிரச்னை? அதிமுக கவுன்சிலர் தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாநகராட்சி 83வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,‘மதுரை மாநகராட்சியில் சில கட்டிடங்களுக்கு வணிக வரிக்கு பதிலாக, குடியிருப்பு வரியாக மாற்றி நிர்ணயம் செய்தும், குடியிருப்பு கட்டிடங்களுக்கு வரி குறைப்பு செய்தும் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சியின் 5 மண்டல குழு தலைவர்கள், 2 நிலைகுழுத்தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். இதில், தமிழ்நாடு காவல்துறை விசாரணை முறையாக நடைபெறாது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, டிஐஜி அபினவ்குமார் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி,‘மதுரை மாநகராட்சியில் முந்தைய 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சொத்து வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய உதவி ஆணையர் (வருவாய்) தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
முழுமையான விசாரணை நடத்தப்படும். அதுவரை கைது நடவடிக்கை தொடரும்,’ என்றார். அப்போது மனுதாரர் தரப்பில்,‘முறைகேடு நடந்த காலத்தை குறிப்பிட்டு போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சரியான பிரிவுகளில் வழக்கு பதியவில்லை. முந்தைய 10 ஆண்டுகளில் நடந்த சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக விசாரிப்பது என்பது விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கமாகும்’’ என கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற சொத்து வரி நிர்ணயம் தொடர்பான முறைகேடுகளை விசாரித்தால் உங்களுக்கு என்ன பிரச்னை? முறைகேடு எந்த ஆண்டில் நடைபெற்றாலும் அது விசாரிக்கப்பட வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் புதிய வழக்கு பதிவு செய்து கொள்ளலாம். சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக்குழு, விசாரணையை தொடரலாம்’’ எனக் கூறிய நீதிபதிகள், விசாரணையை ஆக.26க்கு தள்ளி வைத்தனர்.