Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மதுரை மாநகராட்சி மேயர் ராஜினாமா: கமிஷனரிடம் கடிதம் வழங்கினார்

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, தனது பதவியை ராஜினாமா செய்து கமிஷனரிடம் கடிதம் வழங்கினார். மதுரை மாநகராட்சியில் 3 லட்சம் வணிக கட்டிடங்கள் உள்ளிட்ட 4 லட்சத்திற்கும் அதிக சொத்து வரி செலுத்தும் கட்டிடங்கள் உள்ளன. 2022, 2023ல் நடத்திய திடீர் ஆய்வில் பல கோடி ரூபாய் வரி வசூல் வருவாய் இழப்பு மற்றும் முறைகேடு நடந்தது தெரியவந்தது. அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி குறைப்பு செய்தது ஆய்வில் உறுதியானது. இதையடுத்து சைபர் க்ரைம் மற்றும் மத்திய குற்றப்பிரிவினர் விசாரணையை வேகப்படுத்தினர்.

இம்முறைகேடு புகார் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த வரி முறைகேடு வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் பேரில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவினர், மத்திய குற்றப்பிரிவினருடன் இணைந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி வரிவிதிப்புக்குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், மாநகராட்சி உதவி கமிஷனர் சுரேஷ்குமார், ஓய்வுபெற்ற உதவிகமிஷனர் ரங்கராஜன், கணினி ஆபரேட்டர் கார்த்திக், தொழில்நுட்ப உதவியாளர் தனசேகர் மற்றும் செந்தில் பாண்டியன், ரவிச்சந்திரன், ஜமால் நஜிம், பாலமுருகன், கருணாகரன், ரவி, முகம்மது நூர், செந்தில்குமரன், சகா உசேன், ராஜேஷ்குமார், சதீஷ் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்ட சிலர் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.

ஏற்கனவே மேயரின் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி பணிகளில் தலையிடுவதாக கூறி கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது. வரி வசூல் முறைகேட்டில் மேயரின் கணவர் கைதான நிலையிலும் மேயர் இந்திராணி தனது பதவியில் தொடர்ந்தார். மதுரையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணி மீது முதலமைச்சர் உரிய முடிவு எடுப்பார் என கூறியிருந்தார். இந்நிலையில் மாநகராட்சி மேயர் இந்திராணி, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயனிடம் அளித்துள்ளார். தனது சொந்த குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மேயரின் ராஜினாமாவை ஏற்பது தொடர்பாகவும், புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாகவும் மதுரை மாநகராட்சியின் அவசரக் கூட்டம் துணைமேயர் நாகராஜன் தலைமையில் நாளை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் மண்டலத் தலைவர்கள், குழுத் தலைவர்களை தொடர்ந்து தற்போது மேயரும் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.