மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு பாஜவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடுதான் காரணம்: திருமாவளவன் கண்டனம்
சென்னை: மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது பாஜவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை, கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. பாஜ ஆளும் மாநிலங்களில் இந்த இரண்டு நகரங்களை விட சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்கியிருக்கும் ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை நிராகரித்திருக்கிறது.
2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை ஒன்றிய அரசு கூறி இருப்பது வியப்பளிக்கிறது. 14 ஆண்டுகளில் இந்த இரு நகரங்களிலும் மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கிறது. இந்த திட்டம் வழங்கப்படாதது பாஜவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம். இதை மூடி மறைப்பது போல் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொய் செய்தியை பாஜவினர் பரப்பி வருகின்றனர். கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்து வருகின்ற ஒன்றிய பாஜ அரசு, தனது போக்கை திருத்திக் கொள்ள வேண்டுமென்றும்.இவ்வாறு அவர் கூறினார்.


