சென்னை: மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழில் நகரமான கோவை மற்றும் கோவில் நகரமான மதுரை ஆகிய மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்காக கோவையில் 39 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 10,740 கோடி செலவிலும், மதுரையில் 31.93 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 11,368 கோடி செலவிலும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளது.
அதனைத் தொடர்ந்து கூடுதல் ஆவணங்களை இணைத்து அனுப்புமாறு திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், கூடுதல் ஆவணங்களுடன் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை கடந்தாண்டு நவம்பரில் தமிழ்நாடு அரசு மீண்டும் அனுப்பியது. மேலும் எப்படியும் இந்த 2 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் ஒப்புதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நிலம் கையகப்படுத்துவது போன்ற பூர்வாங்க பணிகளையும் தமிழ்நாடு அரசு துவக்கியுள்ளது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன்படி 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் தான் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்படும் என்றும், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவையின் மக்கள் தொகை 15.9 லட்சம், மதுரையின் மக்கள் தொகை 15 லட்சம் என 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளதால் இந்நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கினால் போதுமான பயனாளிகள் எண்ணிக்கை இருக்காது என்றும், இந்த நகரங்களில் திட்டமிட்ட வழித்தடங்களில் இப்போதைக்கு போக்குவரத்து நெரிசல் இல்லை.
எனவே இங்கு மெட்ரோ ரயில் சேவை இயக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டு, முன்மொழிவுகளை நிராகரித்து, ஒன்றிய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 14-ஆம் தேதி திருப்பி அனுப்பியுள்ளது. அதேசமயம் இதே அளவு மக்கள் தொகையுள்ள உத்திரபிரதேசத்தின் ஆக்ரா மற்றும் கான்பூர், மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் பூனே, பீகாரின் பாட்னா மற்றும் போபால், மத்திய பிரதேசத்தில் இந்தூர், குஜராத்தில் சூரத் போன்ற நகரங்களுக்கு அந்நகரங்களின் முக்கியத்துவம் கருதி மெட்ரோ ரயில் சேவை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல்தான், மதுரை கோவுல் நகரமாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும், மூன்று தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தென்மாவட்டங்களுக்கு மாற்று தலைநகரைப் போலவும் திகழ்கிறது.
அதைப்போலவே, கோவை மாநகரம் வளர்ந்து வரும் தொழில் நகரம் மட்டுமல்லாது கொங்கு மண்டலம் மற்றும் மேற்கு மாவட்டங்களின் மையப் பகுதியாகும். எனவே, 24 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகை மற்றும் நிகழ்கால சூழல் இவற்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்நகரங்களின் முக்கியத்துவம் கருதியும் 2 மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் சேவை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


