மதுரையில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் திடீர் கீறல்: பயணிகள் உள்பட 79 பேர் உயிர் தப்பினர்
சென்னை: மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் முன் பக்க சைடு கண்ணாடியில் திடீரென கீறல் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்து தரையிறக்கினார். நல்வாய்ப்பாக, விமானத்தில் இருந்த 74 பயணிகள் 5 விமான ஊழியர்கள் உள்பட 79 பேர் உயிர் தப்பினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு மதுரையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 10.05 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால், 2 நிமிடம் தாமதமாக இரவு 10.07 மணிக்கு புறப்பட்டது. விமானம் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானம். விமானத்தில், 74 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உள்பட 79 பேர் இருந்தனர்.
இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தின் முன் பக்கத்து சைடு கண்ணாடியில் சிறிய அளவில் கீறல் விழுந்து இருப்பதை விமானி கண்டுபிடித்தார். இது மிகவும் ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு அந்த விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
விமானம் வழக்கமாக இரவு 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால் விமானி கண்ணாடியில் கீறல் விழுந்ததால் மிகவும் சாமர்த்தியமாக, அதே நேரத்தில் கூடுதல் வேகத்துடன் விமானத்தை இயக்கி வந்து, 18 நிமிடங்கள் முன்னதாகவே இரவு 11.12 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக வந்து தரை இறங்கியது. அந்த விமானம் ரிமோட் பே எனப்படும், விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான, கார்கோ விமானங்கள் நிற்கும் பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பிக்கப் வாகனங்கள் மூலம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் விமானம் பெரும் ஆபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக சென்னையில் வந்து தரையிறக்கிய சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானியின் சாமர்த்தியமான செயலால் விமானத்திலிருந்து 74 பயணிகள் உள்பட 79 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதையடுத்து விமானத்தில் இருந்து பத்திரமாக இறங்கிய பயணிகள், விமானியை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
* டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவு
மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து கோழிக்கோட்டிற்கு நேற்று அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் விமான கண்ணாடி கீறல் விழுந்து பாதிப்புக்கு உள்ளானதால் இந்த விமானத்தை கோழிக்கோட்டிற்கு அனுப்பாமல், மற்றொரு ஏடிஆர் ரக விமானம் நேற்று அதிகாலை 5.20 மணிக்கு சென்னையில் இருந்து கோழிக்கோட்டிற்கு புறப்பட்டு சென்றது. விமான முன்பகுதி கண்ணாடியில் விழுந்த கீறல் குறித்து, டெல்லியில் உள்ள டிஜிசிஏ எனப்படும் விமான பாதுகாப்பு துறையான டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.