அவனியாபுரம்: மதுரையில் எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதியில் சுமார் இரண்டரை அடி உயரத்தில் கடந்த 1990ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் உள்ள சிலையை, நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் உடைத்து கீழே தள்ளி உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்தில் திரண்ட அதிமுகவினர், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். நேற்று காலை மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, சிலையை ஆய்வு செய்தபின் அவனியாபுரம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையே எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தரப்பில் சேதமடைந்த சிலை சீரமைக்கப்பட்டது.
+
Advertisement