மதுரை விமான நிலைய பெயர் விவகாரம் முற்றுப்புள்ளி வைத்த பிரச்னையை மீண்டும் தூண்டி விடும் எடப்பாடி: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2026 தேர்தலில் ஒற்றை கருத்துடைய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி தான் அமையும். ஜன. 7ம் தேதி புதிய தமிழகம் கட்சி கூட்டணி குறித்து மதுரை மாநாட்டில் அறிவிக்கப்படும். தேர்தல் நேரத்தில் ஒரு சமுதாய வாக்குகளை வாங்குவதற்காக விமான நிலையத்திற்கு தலைவர்கள் பெயரை சூட்டுவேன் என எடப்பாடி அறிவிப்பதால் மற்ற சமுதாயத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.
ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு சமுதாய தலைவர் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அது சாத்தியமாகுமா? முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பிரச்னையை மீண்டும் தூண்டும் விதமாக அமைந்து விடும். சாதி என்ற சகதிக்குள் எடப்பாடி சிக்காமல் இருப்பது நல்லது. தேர்தல் நேரத்தில் கவனமாக மூத்த அரசியல்வாதிகள் கையாள வேண்டும். ஒரு சமுதாயத்தினரை தூக்கி பிடித்து பேசக்கூடாது. இதனால் தேர்தல் நேரத்தில் மற்ற சமுதாய எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். அதிமுக ஆட்சி முடியும் நேரத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எடப்பாடி அறிவித்தார். அதன் விளைவால் தேர்தலில் தோல்வியை தழுவினார். இவ்வாறு கூறினார்.