மதுரை விமான நிலையம் குறித்து பேச்சு எடப்பாடி, உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: தமிழக டிஜிபிக்கு வழக்கறிஞர் மனு
பரமக்குடி: மதுரை விமான நிலையம் குறித்து பேச்சு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, உதயகுமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கத்தின் நிறுவன தலைவரும், ஐகோர்ட் கிளை வழக்கறிஞருமான மானகிரி செல்வகுமார், தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் மதுரை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தனது சுய அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்திற்கு எதிரான கொள்கையுடன் செயல்பட்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பட்டியல் வகுப்பை சேர்ந்த மக்களுக்கு எதிராக தென் மாவட்டங்களில் கலவரத்தை தூண்டும் நோக்கில் கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு தூண்டுதலாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் செயல்பட்டுள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு நிலம் அளித்து பெரும் பங்களிப்பை செய்தவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களும், முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்களும் என்பதனை தென் மாவட்ட மக்கள் எல்லாரும் அறிவர்.
இதனால் சில கிராம மக்கள் தங்களது பூர்வீக அடையாளத்தை இழந்துள்ளனர். அதனை சார்ந்த வழக்குகள் ஐகோர்ட் மதுரை கிளையில் இன்னும் நிலுவையில் உள்ளன. இத்தகைய சூழலில் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத் தலைவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று பொறுப்பற்ற வகையில் பேசியிருப்பது சமூகத்தில் பிரிவினையை தூண்டும் தன்மை கொண்டது. இது தென்மாவட்டங்களில் சாதி கலவரத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. மேலும், இந்த கருத்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்களின் பரிந்துரையின் பேரில் வெளிப்பட்டது.
விமான நிலையம் பெயர் சூட்டுதல் சம்பந்தமாக ஏற்கனவே ஒன்றிய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தின் ரிட் வழக்கில் எந்த ஒரு தலைவரின் பெயரையும் சூட்டும் எண்ணம் இல்லை என தங்களது கருத்தை பதிவு செய்துள்ளது. இந்தக் கருத்து, வழக்கறிஞர் என கூறிக் கொள்ளும் உதயகுமாருக்கு தெரிந்திருந்தும், தற்போது சுய சமூகத்தில் ஆதரவை திரட்டும் பொருட்டு தைரியமாக இந்த கருத்தை எழுதிக் கொடுத்து பேச வைத்துள்ளார்.
இந்த செயல்கள் இந்திய தண்டனைச் சட்டம் சாதி, மத அடிப்படையில் பிரிவினை தூண்டுதல், சாதி உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கத்துடன் செய்த கருத்துரை, பட்டியல் சாதி மக்களை அவமதிக்கும் வகையில் பொதுவெளியில் பேசுவது, பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக பகைமை, வெறுப்பு, தீய மனப்பான்மையை தூண்டுதல் ஆகியவற்றின் கீழ் குற்றமாகும்.
இச்செயல்கள் சமூக அமைதியை குலைக்கும், சாதி உணர்வை தூண்டும், சட்டம், ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும். ஆகவே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், எதிர்காலத்தில் தென் தமிழகத்தில் சாதி கலவரம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.