அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் இன்று காலை தீவிர சோதனை நடைபெற்றது. மதுரை விமான நிலைய இயக்குனருக்கு நேற்றிரவு வந்த மின்னஞ்சலில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, மதுரை விமான நிலைய உள்வளாகம் மற்றும் வெளி வளாக பகுதிகளில் அங்கு பணியில் இருக்கும் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீசார் இணைந்து இன்று காலை தீவிர சோதனை மேற்கொண்டனர். விமான நிலையத்திற்கு வந்த வாகனங்கள், பயணிகளை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர்.
மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடம், பயணிகள் வந்துசெல்லும் இடம், விமான ஓடுதளம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாய் சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இருப்பினும், இந்த சோதனையால் விமான போக்குவரத்து ஏதும் பாதிக்கப்படவில்லை.
கடந்த செப்.28ம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மதுரை விமான நிலையத்திற்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.