அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்திலிருந்து நேரடி உள்ளூர் சேவையாக சென்னை - ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வெளிநாட்டு சேவையாக துபாய், கொழும்பு நகரங்களுக்கு நேரடி சேவையும், மலேசியாவின் பினாங்கு நகருக்கு சென்னை வழியாகவும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரை விமான நிலையம் சுங்கத்துறையுடன் கூடிய துஎன்பதால் இங்கிருந்து வெளிநாட்டு சேவையாக பல வெளிநாட்டு நகரகளுக்கு விமானம் இயக்க தொடர்ந்து தென் தமிழக மக்களால் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இண்டிகோ நிறுவனம் ஐக்கிய அரபு நாட்டின் தலைநகரான அபுதாபிக்கு நேற்று தனது சேவையை துவக்கியது. மதுரையிலிருந்து வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) மதியம் 2.35க்கு புறப்படும் விமானம் அபுதாபிக்கு அந்நாட்டு நேரப்படி மாலை 5.20க்கு சென்றடையும். அதே போல் அபுதாபியிலிருந்து அந்நாட்டு நேரப்படி காலை 7.20க்கு புறப்படும் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு மதியம் 1.50 மணிக்கு வந்து சேரும். மொத்த பயண நேரம் 4 மணி 15 நிமிடம். நேற்று அபுதாபியில் இருந்து கிளம்பி மதுரைக்கு வந்த முதல் விமானத்தில் 134 பயணிகள் வந்தனர். மதுரையிலிருந்து அபுதாபிக்கு 174 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர்.