ஊட்டி : நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு அதிகம் உள்ள மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்குள்ள வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, மான்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்கள், அரிய வகை தாவரங்கள் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமப் பகுதிகள் வானத்தை ஒட்டியே அமைந்துள்ளன. இதனால் அவ்வப்போது காட்டுமாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில் உலா வருவதை காண முடியும்.
மான், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதை காட்டிலும் வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை, கோழி, ஆடு உள்ளிட்டவற்றை வேட்டையாடுவது சுலபம் என்பதால் சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் உலாவந்து அவற்றை வேட்டையாடுகின்றன.
இதேபோல் கரடியும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இதனிடையே கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பு பகுதிகளில் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி கப்பச்சி அருகே மதுரைவீரன் காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி ஒன்று சாலையில் குடியிருப்பு பகுதியை நோக்கி ஒய்யாரமாக நடந்து வந்தது.
இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். சாலையை கடந்து தேயிலை தோட்டம் வழியாக வனத்திற்குள் சென்று மறைந்தது. இந்த வீடிேயா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.