Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஜனவரியில் நடைபெறும்: கோயில் நிர்வாகம் தகவல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதி. இதன்படி 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்ரவரி.2ல் கோயிலின் வீரவசந்தரராயர் மண்டபம் தீ விபத்தில் முற்றிலும் சிதைந்தது. சீரமைப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும் நிர்வாக காரணங்களால் தாமதமாக பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து இதர திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது என்பதாலேயே 2021ல் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. 27 நவம்பர் 2024ம் ஆண்டு சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவித்தார். இதன்பிறகு திருப்பணிகள் வேகம் எடுத்தன. இதை தவிர்த்து இதர திருப்பணிகளுக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டது.

முதல்வர் அறிவித்தபடி நடத்த வேண்டும் என்பதாலும், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானால் பணிகள் தடைபடும் என்பதாலும் 2026 ஜன.26ல் கும்பாபிஷேகம் நடத்துவதென அறநிலையத்துறை நாள் குறித்திருந்தது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிடக் கோரி மணிபாரதி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் அறிக்கை அடிப்படையில் புது மண்டபத்தை புனரமைக்கவும் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயிலில் புது மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் டிசம்பருக்குள் முடிந்துவிடுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கோவில் நிர்வாகம் அடுத்தாண்டு ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்து கோயில் இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.