*தீபாவளி பண்டிகைக்கும் இயக்க எதிர்பார்ப்பு
நெல்லை : பண்டிகை காலம் முடிந்த நிலையில் மதுரை கோட்டத்தில் முன்பதிவில்லாத ரயில்கள் மூலம் ரூ.ஒரு கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனவே இந்த ரயில்களை தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த வாரம் முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை நாட்கள் வந்தன. இதனால் நெல்லை - சென்னை ரயில்களில் கடும் கூட்டம் அலை மோதியது.
இதை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கியது. மேலும் கூடுதலாக பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நெல்லை - சென்னை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இந்த முன்பதிவில்லாத ரயில்கள் மூலம் ரயில்வே மதுரை கோட்டத்திற்கு மட்டும் பெரும் வருவாய் கிடைத்துள்ளது.
ஆயுத பூஜை விடுமுறை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அதிகளவில் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பினர். இதனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.
மதுரை கோட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டு விற்பனையில் ரூ.1.03 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை - சென்னை மற்றும் நெல்லை - சென்னை இடையே மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்த ரயில்களில் விசாலமான இடவசதி கொண்ட தலா 17 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டன. மதுரையில் இருந்து புறப்பட்ட மெமு சிறப்பு ரயிலில் ஆயிரத்து 200 பயணிகளும், நெல்லையில் இருந்து புறப்பட்ட மெமு சிறப்பு ரயிலில் 2 ஆயிரம் பயணிகளும் பயணித்தனர்.
கூட்ட நெரிசலை சமாளிக்க முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உதவும் வகையில் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை, மற்றும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். சிறப்பு ரயில்களின் பலனாக மதுரை கோட்டத்திற்கு ரூ.ஒரு கோடிக்கும் மேல் வருவாய் கிடைத்துள்ளது.
மெமு ரயில்கள் இயக்கிய முயற்சிக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ரயில்வே துறைக்கும் அதிக வருவாய் கிடைத்துள்ளது. வருகிற அக்.20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத் தொடர்ந்து திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இதனால் தீபாவளி பண்டிகையை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு வரும் பயணிகளால் சென்னை - நெல்லை மார்க்க ரயில்களில் கூட்டம் அலைமோதும்.
ஏற்கெனவே கடந்த 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்கிய அடுத்த 5 நிமிடங்களில் சென்னை - நெல்லை, நாகர்கோவில், தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
அனைத்து ரயில்களிலும் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு ஏசி உட்பட அனைத்து டிக்கெட் விற்பனைகளும் 10 நிமிடங்களில் நிறுத்தப்பட்டன. இரண்டாம் வகுப்பை பொறுத்தவரை அனைத்து ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 500ஐத் தாண்டியது.
எனவே தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென் மாவட்டங்களுக்கு இதுபோன்று இடவசதி அதிகம் கொண்ட சிறப்பு மெமு ரயில்களை இயக்க வேண்டும். இந்த ரயில்கள் சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணி, 10 மணிக்கு புறப்படுவது போல இயக்கினால் தென் மாவட்ட பயணிகள் பலரும் பயனடைவர். இதற்கு தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.