மதுரை: மதுரை புது ஜெயில் ரோட்டில் உள்ள மத்தியச் சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிறையில் செல்போன் பயன்படுத்துவது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கண்டறிந்து கட்டுப்படுத்தும் வகையில் திடீர் சோதனைகள் நடத்துவது வழக்கம். இவ்வகையில் திடீர் நடவடிக்கையாக நேற்று சிறைக்குள் அறை, அறையாக சென்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறை வளாகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது.
மதுரை நகர் போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் 2 உதவி கமிஷனர்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 134 போலீசார் மதுரை மத்தியச் சிறைக்குள் சிறைவாசிகளின் அறைகள், சமையல் கூடங்கள், தோட்டப்பகுதிகள் என ஒரு இடம் விடாமல் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 7 மணி துவங்கி 10 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடந்த சோதனையால் சிறை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனையில் போதைப்பொருள் உள்ளிட்ட எதுவும் சிக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.