Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரை ஏற்றி கொல்ல முயன்றதாக சொன்ன வழக்கு; ஒரு மதத்தினர் மீது திடீரென குற்றம்சொல்ல என்ன காரணம்..? படுக்கையில் இருந்தவாறு மதுரை ஆதீனம் மழுப்பல் பதில்

சென்னை: தற்செயலாக நடந்த விபத்து குறித்து, ஒரு மதத்தினர் மீது திட்டமிட்டு குற்றம் சொல்ல என்ன காரணம் என்பது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்விகளுடன் சென்னை சைபர் க்ரைம் போலீசார் மதுரை ஆதீனத்திடம் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் படுக்கையில் இருந்தவாறு மழுப்பலாக பதில் அளித்து மவுனம் காத்தார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காததால் போலீசார் முழு விசாரணை நடத்த முடியாமல் திரும்பினர்.

சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கடந்த மே 5ம் தேதி அனைத்துலக வைச சித்தாந்த மாநாடு நடந்தது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மதுரை ஆதீனம் செய்து இருந்தார். மாநாட்டிற்கு மதுரை ஆதீனம் சாலை மார்க்கமாக தனது காரில் ெசன்னைக்கு வந்து கொண்டிருந்தார். கார் உளுந்தூர்பேட்டை அருகே வரும் போது, நான்கு முனை சந்திப்பு சாலையை கார் கடக்கும் வேறு திசையில் மற்றொரு கார் மதுரை ஆதீனம் வந்த கார் மீது மோதுவது போல் வந்தது. இதில் நல்வாய்ப்பாக மதுரை ஆதீனம் விபத்து நடக்காமல் உயிர்தப்பினார்.

அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம் பேசுகையில், ‘நேற்று கூட ஒரு சம்பவம் நடந்து விட்டது. என்னை கொலை செய்ய சதி செய்து விட்டனர். தருமை ஆதீனம் ஆசிதான் என்னை காப்பாற்றியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமான்தான் என்னை காப்பாற்றினார். இன்று இந்த இடத்திலே நிற்பேனா என்ற அளவுக்கு நேற்று ஆகிவிட்டது’ என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார், விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பெற்று விசாரணை நடத்திய போது, மதுரை ஆதீனத்தின் கார் தான் அதிவேகமாக செல்வது போன்றும், மறு முனையில் இருந்து வந்த கார் பிரேக் பிடித்ததால் விபத்து நடக்காமல் மதுரை ஆதீனத்தின் கார் தப்பியதும் தெரியவந்தது. அதன்பிறகு விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

ஆனால், மதுரை ஆதீனம், அந்த காரில் குல்லா அணிந்து மற்றொரு மதம் சார்ந்த நபர்கள் இருந்ததால், திட்டமிட்டு தன்னை கொலை செய்ய முயன்றது போன்று மதுரை ஆதீனம் பொய் பேசியது தெரியவந்தது.

பின்னர் இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறையில், அயனாவரத்தை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் புகார் அளித்தார். புகாரின் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மதுரை ஆதீனத்தை கொலை செய்யும் வகையில் எந்த சம்பவங்களும் நடைபெற வில்லை என்று சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் நடத்தப்பட்ட விசாரணை மூலம் உறுதியானது.

அதைதொடர்ந்து சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் மதுரை ஆதீனம் மீது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இரு வேறு சமூகங்களுக்கு இடையே பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்படுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தவறான தகவல்களை பரப்புதல் என 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதன்பிறகு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மதுரை ஆதீனத்திற்கு கடந்த ஜூன் 30 மற்றும் 5ம் தேதி என 2 முறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் மதுரை ஆதீனம் நேரில் ஆஜராகவில்லை. இதனால் சென்னை போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையில், மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேல் உள்ளதால் வயது மூப்பு காரணமாக சில நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர், விமானம் மூலம் நேற்று காலை மதுரை சென்றனர். பிறகு காலை 11 மணிக்கு மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீனம் மடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது மடத்தில் இருந்த ஆதீனத்தின் ஆதரவாளர்கள் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி தலைமையிலான குழுவினர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்த வந்துள்ளோம் என கூறி உள்ளே சென்றனர்.

காலை 11.15 மணிக்கு மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியாரை நேரில் சந்தித்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினார். அப்ேபாது ஆதீனம் தரப்பில் 3 நாட்களுக்கு முன்பு ‘ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து, தற்போது ஆதீனம் படுத்த படுக்கையாகவே இருக்கிறார் என்று அவரது உதவியாளர்கள் கூறினர். அதற்கு போலீசார், நாங்கள் ஆதீனத்திடம் விசாரணை நடத்த தான் வந்துள்ளோம். அவர் பேசினால் போதும் என்றும், அவரது உதவியாளர்கள் யாரும் விசாரணையின் போது இருக்க வேண்டாம் என அனைவரையும் போலீசார் அறையில் இருந்து வெளியேற்றினர். விசாரணையின் போது ஆதீனத்தின் வக்கீல் ராமசாமி மெய்யப்பன் மற்றும் பாஜ வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

விசாரணை காலை 11.30 மணிக்கு தொடங்கியது. விசாரணை அதிகாரி வழக்கு தொடர்பாக ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட கேள்விகளை ஆதீனத்திடம் கேட்டார். குறிப்பாக, தற்செயலாக நடந்த விபத்தை, ஏன் ஒரு மதத்தினர் மீது கொலை செய்ய சதி செய்துவிட்டனர் என்று கூறினீர்கள்? விபத்து நடந்த போது அருகில் உள்ள எந்த காவல் நிலையத்திலும் ஏன் புகார் அளிக்கவில்லை. விபத்து நடந்து ஒரு நாள் கழித்து ஏன் அனைத்துலக வைச சித்தாந்த மாநாட்டில் என்னை கொலை செய்ய சதி நடந்தததாக பேட்டி அளிக்க என்ன காரணம்? விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் சதி நடந்ததற்கான என்ற காட்சியும் பதிவாகவில்லையே? என 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு ஆதீனம் ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்துவிட்டு, மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். ஒரு கட்டத்தில் மதுரை ஆதீனம் தனக்கு மிகவும் களைப்பாக இருப்பதாகவும், ஓய்வு எடுக்க வேண்டும் என விசாரணை அதிகாரியிடம் உதவியாளர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று மெதுவாக போலீசாரிடம் கேட்டார். அதற்கு போலீசார் விசாரணை என்பதால் உங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் அனுமதி உண்டு, வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். அதன் பிறகு விசாரணை அதிகாரி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் ஆதீனம் தூங்குவது போல் இரண்டு கண்களை மூடிக்கொண்டார்.

சிறிது நேரம் காத்திருந்த அதிகாரிகள் மீண்டும் அவரிடம் கேள்விகள் கேட்ட முயன்றனர். அனால் மதுரை ஆதீனத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஒருகட்டத்தில் அவர் ஹெர்னியா அறுவை சிகிச்சையை காரணம் காட்டி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். அதனை தொடர்ந்து மேலும் விசாரணை நடத்த முடியாமல் ஒரு மணி நேரத்தில் அதாவது, 12.30 மணிக்கு போலீசார் விசாரணையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு ெசன்றனர். இதனால் ஆதீனத்திடம் முழுமையாக விசாரணை நடத்த முடியாமல் சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அதேநேரம் மதுரை ஆதீனத்திடம் ஓரிரு நாளில் மீண்டும் விசாரணை நடத்த சென்னை சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி அவரிடம் முழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக உள்ளே நுழைந்த பெண் இன்ஸ்பெக்டர்

மதுரை ஆதீனம் மிகவும் பழமையானது. மதுரை ஆதீனத்திற்குள் எந்த பிரச்னை நடந்தாலும் போலீசார் மடத்திற்குள் நுழைய மடத்தின் காவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் மதுரை ஆதீனத்திற்குள் அதுவும் ஆதீனத்தின் ஓய்வு அறையில் முதல் முறையாக பெண் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியது மதுரை ஆதீனம் மடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசாரை தடுத்து நிறுத்திய பாஜவினர்

நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஆதீனம் மடத்திற்கு சென்றனர். அப்போது மடத்தின் முன்பு பாஜவினர் திரண்டு வந்து போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் விசாரணை அதிகாரிகள் மடத்திற்குள் செல்ல முடியாத நிலை இருந்தது. அவர்களிடம் மதுரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல வில்லை. ஒரு கட்டத்தில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் துணிச்சலுடன் பாஜ மற்றும் ஆதீனத்தின் ஆதரவாளர்களின் எதிர்ப்பை மீறி மடத்தின் பின் வாசல் வழியாக உள்ளே ெசன்று, மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தினர்.