மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும் என மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்பிரான் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதரின் மறைவுக்குப் பிறகு ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பு வந்தார். 293ஆவது மதுரை குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நியமனம் செய்யப்பட்டார். அண்மையில் மதுரை ஆதீனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து, மதுரை ஆதீனத்திற்கு எதிராக மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் அமர்ந்து இளைய ஆதீனம் தம்பிரான் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அடுத்த ஆதீனத்தைத் தேர்வு செய்வதில் தன்னிச்சையாக மதுரை ஆதீனம் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மடத்தின் தம்பிரான் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், மதுரை ஆதீன மட விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட வேண்டும் என தம்பிரான் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது; மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும். மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதால் ஆதீன மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும். மதுரை ஆதீனத்தில் பாரம்பரியமாக கடைபிடிக்கும் மரபுகளை தற்போதைய ஆதீனம் மீறுகிறார். வழக்கில் இருந்து விடுபட்ட பின்னரே மதுரை ஆதீனம் தனது பணிகளை தொடர வேண்டும். இந்துசமய அறநிலையத்துறை தலையிட்டு பிற அதீனங்களுடன் ஆலோசித்து இளைய சன்னிதானத்தை தேர்வு செய்ய வேண்டும். மதுரை ஆதீனமடத்தில் அரசியல் கலப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.