Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை விமான நிலையம் குறித்து பேச்சு; எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார் மீது புகார்

பரமக்குடி: தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் மதுரை கலெக்டருக்கு மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கத்தின் நிறுவன தலைவரும், ஐகோர்ட் கிளை வழக்கறிஞருமான மானகிரி செல்வகுமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சுய அரசியல் ஆதாயத்திற்காக பட்டியல் வகுப்பை சேர்ந்த மக்களுக்கு எதிராக தென்மாவட்டங்களில் கலவரத்தை தூண்டும் நோக்கில், மதுரை விமான நிலையம் குறித்து கருத்துரைத்துள்ளார். இதற்கு தூண்டுதலாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் செயல்பட்டுள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு நிலம் அளித்து பெரும் பங்களிப்பை செய்தவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களும், முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்களும் என்பதனை தென் மாவட்ட மக்கள் அனைவரும் அறிவர். இதனால், சில கிராம மக்கள் தங்களது பூர்வீக அடையாளத்தை இழந்துள்ளனர். இது தொடர்பான வழக்குகள் ஐகோர்ட் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளன.

இந்த சூழலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை விமான நிலையத்திற்கு ஒரு சமூக தலைவரின் பெயரை சூட்ட வேண்டும் என பேசியிருப்பது சமூகத்தில் பிரிவினையை தூண்டும் தன்மை கொண்டது. இந்த கருத்து முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் பரிந்துரையின் பேரில் வெளிப்பட்டது. மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுதல் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் ரிட் வழக்கில், எந்த ஒரு தலைவரின் பெயரையும் சூட்டும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை என தங்களது கருத்தை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், சுயசமூகத்தில் ஆதரவை திரட்டும் பொருட்டு ஆர்.பி.உதயகுமார் எழுதி கொடுத்து பேச வைத்துள்ளார்.

இந்த செயல்கள் இந்திய தண்டனை சட்டம் சாதி, மத அடிப்படையில் பிரிவினை தூண்டுதல், சாதி உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கத்துடன் செய்த கருத்துரை, பட்டியல் சாதி மக்களை அவமதிக்கும் வகையில் பொதுவெளியில் பேசுவது மற்றும் பகைமை, வெறுப்பு, தீய மனப்பான்மையை தூண்டுதல் ஆகியவற்றின் கீழ் குற்றமாகும். இச்செயல்கள் சமூக அமைதியை குலைக்கும், சாதி உணர்வை தூண்டும், சட்டம்- ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும். எனவே, எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். எதிர்காலத்தில் தென் தமிழகத்தில் சாதி கலவரம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.