‘மேட்லாக்’ தொடரில் நடித்து வந்த நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகர் வெளியேற்றம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ‘மேட்லாக்’ தொலைக்காட்சித் தொடரின் நடிகர் டேவிட் டெல் ரியோ, சக நடிகை அளித்த பாலியல் புகாரை அடுத்து அதிரடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரபல சிபிஎஸ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடரான ‘மேட்லாக்’-ல் நடித்து வந்த நடிகர் டேவிட் டெல் ரியோ என்பவர் மீது சக நடிகையான லியா லூயிஸ் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பாராமவுண்ட் ஸ்டுடியோ வளாகத்தில் இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து லியா லூயிஸ் 2ம் தேதி புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஸ்டுடியோ நிர்வாகம் உடனடியாக உள்விசாரணையைத் தொடங்கியது. விசாரணையைத் தொடர்ந்து, அதே நாளில் டேவிட் டெல் ரியோ பணியில் இருந்து நீக்கப்பட்டு, ஸ்டுடியோ வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து நடிகை லியா லூயிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, ‘அன்புடனும் வலிமையுடனும் முன்னேறிச் செல்கிறேன்’ என்றும் பதிவிட்டுள்ளார்.
டேவிட் டெல் ரியோவின் பணி நீக்கத்தைத் தொடர்ந்து, அவர் நடித்து வந்த ‘பில்லி மார்டினெஸ்’ என்ற கதாபாத்திரத்தை, தொடரின் இரண்டாம் பாகத்தின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து நீக்குவதற்காகத் தயாரிப்பாளர்கள் கதையை மாற்றி எழுதி வருகின்றனர். ஏற்கனவே இரண்டாம் பாகத்தின் பாதி எபிசோடுகள் படமாக்கப்பட்டுவிட்டதால், அந்த எபிசோடுகளில் அவரது கதாபாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேத்தி பேட்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தத் தொடரின் இரண்டாம் பாகம், திட்டமிட்ட தேதியில் வெளியாக உள்ளது.