ஆலந்தூர்: சென்னை மடிப்பாக்கம், ராம் நகர் தெற்கு, 5வது குறுக்கு தெருவில் உள்ள பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை பழுதுபார்த்து விற்பனை செய்யும் கடையில் இன்று காலை தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக கடை உரிமையாளரிடம் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதற்குள் கடை முழுவதிலும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததில், அப்பகுதி முழுவதிலும் கரும்புகை சூழ்ந்தது. அப்பகுதி மக்கள் கடும் மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சலால் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் மடிப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர், அந்த பழைய எலக்ட்ரானிக் பொருள் விற்பனை கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி வீரர்கள் அணைத்தனர். இவ்விபத்தில், கடையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டன.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அந்த எலக்ட்ரானிக் கடை மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாகத் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.