மத்தியப் பிரதேசம் - போபால் அருகே மாநில நெடுஞ்சாலையில் திடீரென 30 அடி ஆழம் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு!
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பில்கிரியா கிராமத்திற்கு அருகே மாநில நெடுஞ்சாலையில் நேற்று திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு 30 அடி ஆழம் பள்ளம் ஏற்பட்டது. இந்த சாலை 2013ல் அமைக்கப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளதாகவும் அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மண்டிதீப்பிலிருந்து இயிண்ட்கெடிக்கு செல்லும் பாலத்தின் தடுப்புச் சுவர் நேற்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை சேதமடைந்தது, இதனால் சாலையின் ஒரு பெரிய பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் எந்த கனரக வாகனங்களும் அந்தப் பகுதி வழியாகச் செல்லாததால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ச
ம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் மத்தியப் பிரதேச சாலை மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. சேதமடைந்த சாலைப் பகுதி தடுப்புச் சுவர்களால் மூடப்பட்டு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலை 2013ம் ஆண்டு கட்டப்பட்டது. இச்சாலை இந்தூர், ஜபல்பூர், ஹோஷங்காபாத், மண்டலா, சாகர், பண்டேல்கண்ட் மற்றும் ஜெய்ப்பூர் ஆகியவற்றை இணைக்கிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மத்தியப் பிரதேச சாலை மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் ஒரு குழுவை அமைத்துள்ளது. விசாரணை அறிக்கை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். அறிக்கையின் அடிப்படையில் மேலும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.