செய்யூர்: நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவதால் மதுராந்தகம்-சூனாம்பேடு நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுராந்தகத்தில் இருந்து சூனாம்பேடு செல்லும் நெடுஞ்சாலை சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இந்த நெடுஞ்சாலை வழியாக தினமும் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் இரு சக்கரம், கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், பகலும் இரவும் எந்நேரமும் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகரித்து காணப்படும். இந்த நெடுஞ்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையோரங்களில் ஆங்காங்கே சேதமடைந்து குறுகி விட்டதால் வாகனங்கள் எதிர்எதிரே கடக்கும் போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சித்தாமூர் அடுத்த முதுகரையில் இருந்து மதுராந்தகம் வரையிலான 5 கிலோமீட்டர் சாலை மிகவும் குறுகி உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இந்த சாலையில் பயணித்து வருகின்றனர். இந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் பெரும்பாலான விபத்துகள் இரவு நேரங்களில் நிகழ்ந்து வருகிறது. சித்தாமூரில் இருந்து செய்யூர் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதை போல் மதுராந்தகம்-சூனாம்பேடு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் உயிர் பாதுகாப்பு கருதி மதுராந்தகம்-சூனாம்பேடு நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து சாலைகளில் மின் விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


