Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாதவரத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ரூ.20 கோடி மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: பெண் உள்பட 6 பேரிடம் விசாரணை

திருவொற்றியூர்: மாதவரம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதை பொருட்களை பறிமுதல் செய்து பெண் உள்பட 6 பேரிடம் விசாரணை நடத்துகின்றனர். சென்னை மாதவரம் ரோஜா நகரில் போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து புதியதாக தொடங்கப்பட்டுள்ள ஏ.என்.ஐ.யூ பிரிவு போலீசார் உடனடியாக மாதவரம் காவல் சரக காவல் அதிகாரிகளுடன் இணைந்து கடந்த 22ம்தேதி மாதவரம் ரோஜா நகரில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த போதை பொருட்கள் வியாபாரி வெங்கடேசன் (41), அவரது கூட்டாளி திருவல்லிக்கேணி பார்டர் தோட்டத்தை சேர்ந்த கார்த்திக் (36) ஆகியோரை கைது செய்து 1.5 கிலோ கிராம் மெத்த பெட்டமைனை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து வெங்கடேசனுக்கு பின்னால் உள்ள போதை பொருட்கள் கடத்தல் கும்பலை முழுவதுமாக பிடிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து சிறையில் உள்ள வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளி கார்த்திக் ஆகியோரை நேற்று கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வெங்கடேசனின் செல்போனில் தொடர்புகொண்டவர்களை வைத்து விசாரணை நடத்தியதில், இவருடன் தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை உள்பட பல பகுதிகளில் இருந்து போதைபொருள் கடத்தல் கும்பல் தொடர்புகொண்டு பேசியது தெரிந்தது.

இதையடுத்து கூடுதல் காவல் ஆணையாளர் நரேந்திரநாயர் உத்தரவின்படி, கொளத்தூர் துணைஆணையாளர் பாண்டியராஜன், புழல் சரக உதவி ஆணையர் சகாதேவன், இன்ஸ்பெக்டர் பூபாலன் ஆகியோர் வெங்கடேசன், கார்த்திக் ஆகியோர் கொடுத்த தகவல்படி, வெங்கடேசனின் மனைவி ஜான்சி உள்பட 6 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, வீட்டில் பதுக்கிவைத்திருந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 16 கிலோ மெத்தம்பெட்டமின் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை பிடிக்க டெல்லி மற்றும் தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.