மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கு சிபிசிஐடி விசாரிக்க கோரி ஜாய் கிரிஸ்டில்டா மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கோவையை சேர்ந்த பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை 2வது முறையாக திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டில்டா கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜாய் கிரிஸ்டில்டா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். அவர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மோசடி, மிரட்டல், கொடுமைப்படுத்துதல், கருச்சிதைவை ஏற்படுத்துதல், மின்னணு பதிவுகளை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் புகார் அளித்தேன்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறை விசாரணை நடத்தி உள்ளது. இந்த விசாரணை திருப்திகரமாக இல்லை. கடந்த ஒன்றரை மாதமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறை உரிய முறையில் விசாரணை நடத்தாததால் தான் மகளிர் ஆணையத்தில் புகார் செய்தேன்.
ரங்கராஜ் பிரபல சமையல் கலைஞர் என்பதால் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், மற்றும் மூத்த அதிகாரிகளின் குடும்ப திருமண நிகழ்வுகளில் இவரது கேட்டரிங் சேவையை பயன்படுத்துவதால் காவல்துறை பாரபட்சமாக விசாரணை நடத்துகிறது. எனவே, மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
