6 மாதம் கர்ப்பமாக உள்ளேன்; திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார்: ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்
சென்னை: தன்னை திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகவும், தான் தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சமையல் கலைஞராகவும், நடிகராகவும் இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். மாதம்பட்டி கேட்டரிங் நிறுவனமும் நடத்தி வருகிறார். இவருக்கு சுருதி என்பவருடன் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையே பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இதுதொடர்பாக ஜாய் கிரிசில்டாவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களுடன் மிஸ்டர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் மிஸ்சஸ் ஜாய் கிரிசில்டா எனவும் பதிவு செய்தார். மேலும் வெளிநாடுகளில் சொகுசு கப்பல் ஒன்றில் இருவரும் தேனிலவு சென்றது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது மனைவியுடன் ஒன்றாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்களும் பரவியது. இந்நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகாரில், நடிகரும் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து குடும்பம் நடத்தியதாகவும், இதனால் நான் தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்தநிலையில் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக பொய் சொல்லி என்னை திருமணம் செய்து ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் படி விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.