மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கு அஜித்குமாரின் சித்தி மகள், டிரைவரிடம் சிபிஐ விசாரணை: 2 மணி நேரம் நடந்தது
திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், நேற்று அவரது சித்தி மகள், ஆட்டோ டிரைவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், நண்பர் அருண்குமார், கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோர் மற்றும் நகை திருட்டு புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமியிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதேபோல், மடப்புரம் விலக்கு ஆர்ச் பகுதியில் போலீசார் சார்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அங்குள்ள காஸ் நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு கருவியை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இதேபோல், மடப்புரம் கோயில் எதிரே அமைந்துள்ள அறநிலையத்துறை பக்தர்கள் தங்கும் விடுதியில் சிபிஐ அதிகாரிகளுக்கு விசாரணைக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அஜித்குமாரின் தாய் மாலதி, கோயில் பகுதியில் தேங்காய் பழக்கடை நடத்தி வரும் சித்தி ரம்யா ஆகியோரிடம் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.
13ம் நாளான நேற்று கோயில் வளாகத்திற்கு எதிரே வணிக வளாகத்தின் முதல் தளத்தில் தங்கும் அறையில் 3 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் விசாரணையை தொடர்ந்தனர். ஏற்கனவே விசாரிக்கப்பட்ட அஜித்குமாரின் நண்பரான ஆட்டோ டிரைவர் அய்யநாரிடம் நேற்றும் விசாரணை நடத்தினர். அவரை தொடர்ந்து அஜித்குமாரின் சித்தி மகளும், மடப்புரம் கோயிலில் தேங்காய் பழக்கடை நடத்தி வருபவருமான கீர்த்தி என்பவரிடமும் நேற்று விசாரணை நடந்தது. மதியம் 2.30 மணிக்கு விசாரணயை துவங்கிய சிபிஐ குழுவினர் மாலை 4.30 மணிக்கு விசாரணையை முடித்து கிளம்பிச் சென்றனர்.