திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையின் 17வது நாளான நேற்று பகல் 12 மணிக்கு டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் மடப்புரம் வந்தனர். ஒரு குழுவினர் கைதான தனிப்படை ஏட்டு கண்ணனின் வீட்டுக்கு சென்றனர். வீடு பூட்டிக் கிடந்ததால் திரும்பி விட்டனர். பின்னர் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விசாரித்தனர்.
டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையிலான மற்றொரு குழுவினர், அஜித்குமாரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு தாயார் மாலதி, தம்பி நவீன்குமாரிடம் ஆதார் கார்டை எடுத்து வருமாறு கூறினர். இரண்டு கார்டையும் சரி பார்த்து விட்டு, இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு கிளம்பிச் சென்றனர். இங்கு 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மற்றொரு குழுவினர் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையை முடித்து விட்டு, பிற்பகல் 3.30 மணிக்கு கிளம்பிச் சென்றனர்.