Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் பாகசாலா நிறுவனத்தை ஜாய் கிரிசில்டா தொடர்புபடுத்தி பேச தடைகோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

செனனை: மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசலா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளால் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் செப்டம்பர் வரை 11 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகியுள்ளது.

நிறுவனத்தின் ஒரு இயக்குனரின் தனிப்பட்ட விவகாரத்துக்காக நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இணையதளத்தில் கம்பெனி பற்றி தேடினால், மெனு கார்டுக்கு பதில், கிரிசில்டாவின் வீடியோ தான் வருகிறது . எனவே, எங்கள் நிறுவனம் தொடர்பான சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர். கிரிசில்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், சமூக வலைதள பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.வர்த்தக நடவடிக்கை குறித்து எதையும் பதிவிடவில்லை.

ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்தனர். எப்போது ரத்து செய்யப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் திரும்ப கொடுக்கப்பட்டது என்று எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. திருமணம் செய்து ஏமாற்றியது குறித்து மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக போலீசில் புகார் அளித்த 3 நாட்களில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன் மூலம் குற்ற வழக்குக்கு வர்த்தக வண்ணம் கொடுக்க முயற்சிக்கின்றனர் என்று வாதிட்டார். அப்போது, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆஜராகி, ரங்கராஜ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.