மக்காவ்: சீனா மக்காவில் பேட்மின்டன் போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபள்ளி, சீனாவின் ஹூ சே அன் ஆகியோர் மோதினர். முதல் செட்டை தருண் 21-12 என்ற புள்ளிக்கணக்கிலும், 2வது செட்டை ஹூ 21-13 எனற புள்ளிக்கணக்கிலும் வசப்படுத்தினர். அதனால் 3வது செட்டை கைப்பற்ற இரண்டு தரப்பும் மல்லுக்கட்டினர்.
இருப்பினும் தருண் அதை 21-18 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால் ஒரு மணி 15 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் தருண் 2-1 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அதே போல் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் வூ யுவன் சென் ஆகியோர் களம் கண்டனர். அதில் லக்சயா 21-14, 18-21, 21-14 என்ற செட்களில் வெற்றிப் பெற்றார்.
ஒரு மணி 3 நிமிடங்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். தருண் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் மலேசிய வீரர் ஜஸ்டின் ஹோ வை எதிர்கொள்ள உள்ளார். தொடர்ந்து நடைபெறும் 2வது அரையிறுதியில் லக்சயா சென், இந்தோனேசிய வீரர் அல்வி ஃபர்ஹான் உடன் மோத இருக்கிறார்.