மபியில் 14 குழந்தைகள் பலி எதிரொலி கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது: மருந்து நிறுவனத்தின் மீதும் வழக்கு பதிவு
சிந்த்வாரா: மபி மாநிலம் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 14 குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதிக நச்சுப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கோல்ட்ரிப் மருந்துக்கு தமிழ்நாடு, மபி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் தடை செய்துள்ளன. கோல்ட்ரிப் மருந்தை தயாரிக்கும், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவடத்தை சேர்ந்த ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்திற்கு எதிராக தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் மீது மபியின் பாரசியா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோல்ட்ரிப் மருந்தை குழந்தைகளுக்கு பரிந்துரை செய்த அரசு மருத்துவர் பிரவீன் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் கிளினீக் நடத்தி வரும் இவர் தன்னிடம் வந்த குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் மருந்தை பரிந்துரைத்துள்ளார்.