எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி: உழவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது; முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: உழவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குகின்ற அரசாக திராவிட மாடல் அரசு இருக்கும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, தரமணி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டு பேசியதாவது: வரலாற்றில் ஒரு சிலர்தான் பல கோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். அப்படி ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் எம்.எஸ்.சுவாமிநாதன். நாட்டின் பெரும்பாலான மக்கள் பட்டினியால் காய்ந்தும் - கால் வயிறும் - அரை வயிறும் சாப்பிட்டு தவித்த காலத்தில், மக்களின் வயிறு நிறைய, மாபெரும் புரட்சி நடத்திய எம்.எஸ்.சுவாமிநாதனுடைய பெயரை இந்தியா என்றைக்கும் நிச்சயம் மறக்காது.
விடுதலைக்கு பிறகு, இந்தியாவை கட்டமைத்துக் கொண்டிருந்த காலம் அது. மக்களின் உணவு தேவை அவ்வளவு எளிதாக பூர்த்தி அடையவில்லை. பசியால் பலர் இறந்தார்கள். அந்த நிலைமையெல்லாம், இன்றைக்கு மாறியிருக்கிறது என்றால் அதற்கு, எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னெடுத்த ‘பசுமைப் புரட்சி’தான் முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, இந்த வளர்ச்சியுடன் வந்த விளைவுகளை பற்றியும், ஒரு அறிவியலாளராக எடுத்துச் சொல்லி அவர் கவலைப்பட்டார். கெமிக்கல் உரங்களுடன் நச்சுத்தன்மை நிலம் எப்படி பாழாகிறது என்றெல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லி, வயிறு நிரம்பினால் மட்டும் போதாது, நாம் வழங்குகின்ற உணவு சத்தானதாவும், நிலையானதாவும் இருக்க வேண்டும் என்று சொன்னார்.
இங்கே பல அறிவியலாளர்களும், அவருடைய ஆராய்ச்சி அறக்கட்டளையை சேர்ந்தவர்களும் இருக்கிறீர்கள். அவருடைய கனவுகளை நனவாக்குகின்ற பணிகளில் நீங்கள் தொடர்ந்து ஈடுபடவேண்டும். சத்தான, அதேசமயம் பெரும் மக்கள் தொகையின் தேவையை தீர்க்கும் ஆற்றலுள்ள பயிர்களை கண்டறிய நீங்கள் எல்லாம் பாடுபட வேண்டும். வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் உழவர்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணியையும் நாம் செய்தாக வேண்டும். இதற்கெல்லாம் அடித்தளமாகதான், திராவிட மாடல் ஆட்சியில், வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு வருகிறோம். அதுவும், இந்த ஆண்டு வேளாண்மை பட்ஜெட்டில், வேளாண்மையில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான ‘டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி’ உருவாக்கப்படும் என்று அறிவித்து, அதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.
எப்படி சுவாமிநாதன் உழவர்களின் உரிமைக்காகவும், நன்மைக்காகவும், நலனுக்காகவும் செயல்பட்டாரோ, அப்படித்தான் நம்முடைய அரசும், உழவர்களின் உணர்வுப்பூர்வமான உறவை பேணி, அவர்களுக்கான பல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும் எங்களுடைய முயற்சிகளுக்கு அறிவியலாளர்களும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிச்சயம் நீங்கள் எல்லாம் துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம் எல்லோருடைய நெஞ்சங்களிலும் நிறைந்து வாழக்கூடிய எம்.எஸ்.சுவாமிநாதன் வழியில், சவுமியா சுவாமிநாதன் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
“ஒன்றிய அரசு இந்திய அளவில், 2070க்குள் கார்பன் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு இருக்கக்கூடிய இந்த நிலையில், தமிழ்நாடு 2050ம் ஆண்டுக்குள்ளே அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறது” என்று நம்முடைய நல்ல முன்னெடுப்புகளுக்கு ஆதரவாக பேசி துணையாக இருக்கிறார்கள். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைத்த ஆளுமைகளில் ஒருவரான எம்.எஸ்.சுவாமிநாதனை பெருமைப்படுத்தும் வகையில், திராவிட மாடல் அரசில், போரூர் ஈரநிலப் பசுமை பூங்காவுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பேரைச் சூட்டி திறந்து வைத்திருக்கிறோம்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் இருக்கின்ற வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ‘டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ என்று அழைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். அதேபோல, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில், ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், டெல்லியில் நடந்த ‘பாரத ரத்னா’ எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாநாட்டில், அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு, சுவாமிநாதன் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார். உழவர்களின் நலனை பாதுகாத்து, சிறப்பான எதிர்காலத்தையும் உருவாக்குகின்ற நம்முடைய பணிகளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்வும், தொண்டும் நமக்கு என்றென்றும் வழிகாட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராஜகண்ணப்பன், தா.மோ.அன்பரசன், சவுமியா சுவாமிநாதன், தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ், இந்து ராம், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஜெயஸ்ரீ முரளீதரன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரங்கலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைத்த ஆளுமைகளில் ஒருவரான எம்.எஸ்.சுவாமிநாதனை பெருமைப்படுத்தும் வகையில், திராவிட மாடல் அரசில், போரூர் ஈரநிலப் பசுமை பூங்காவுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பேரைச் சூட்டி திறந்து வைத்திருக்கிறோம்.