சென்னை: கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து அபகரித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர் பிரவீன் (28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மோசடியில் தொடர்புடையதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கரை மேலும் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், தற்போது 15 நாள் காவலில் சேலம் சிறையில் உள்ளார். காவல் ஆய்வாளர் பிருத்விராஜை சிபிசிஐடி போலீசார் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மேலும் ஒருவரை கைது செய்து சிபிசிஐடி காவல்துறை கரூர் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.