சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சொகுசு பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் பணி, உள்கட்டமைப்பு வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று பெங்களூருவில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு நடப்பு நிதி ஆண்டு 2025-26ல், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றில் 110 குளிர் சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், 20 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 20 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக திறந்தவெளி ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பெங்களூருவில் அமைந்துள்ள வால்வோ நிறுவனத்தில், கூண்டு கட்டும் பணியையும், உள் கட்டமைப்பு வசதிகளையும், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சொகுசு பேருந்தை இயக்குவதற்காக பயிற்சி பெற்று வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பேருந்தை சோதனை முறையில் இயக்கி பார்த்தனர். இந்நிகழ்வின்போது, போக்குவரத்துத்துறை செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் மற்றும் வால்வோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.