ஆடம்பர பொருட்கள் வாங்கி கொடுத்து 13 வயது சிறுமியை பலாத்காரம்: அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ போக்சோவில் கைது
* இசிஆரில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்து சென்று மதுபானம் கொடுத்து உல்லாசமாக இருந்ததும் அம்பலம், n சிறுமியின் அத்தையும் அதிரடி கைது, மேலும் பல சிறுமிகளையும் சீரழித்த கொடூரம்
சென்னை: சென்னையில் 13 வயது பள்ளி சிறுமிக்கு, ஆடம்பர பொருட்கள் வாங்கி கொடுத்து, அடிக்கடி இசிஆரில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் அவரது பெண் தோழியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுபோல் பல சிறுமிகளை சீரழித்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. வேலூர் பகுதியை சேர்ந்த இந்திரா(38)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனது 13 வயது மகளை அவரது அத்தை ஆசை வார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவருடன் நெருக்கமாக பழக்கம் ஏற்படுத்தி எனது மகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் எனது மகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி மாம்பலம் அனைத்து மகளிர் போலீசார், புகார் அளித்த 13 வயது சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: வேலூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தற்போது தாயுடன் வசித்து வருகிறார். அவரது தாய், தற்போது வேலூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த நபரை சிறுமியின் தாய் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், சிறுமியின் தாய் கணவரை பிரிந்து சென்று இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து தற்போது வேலூரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இருவரும் பிரிந்து சென்றாலும், மகள் எதிர்கால வாழ்க்கைக்காக அடிக்கடி மகள் மட்டும் கோடம்பாக்கத்தில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
அப்போது கடந்த 2021ம் ஆண்டு, முதல் கணவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், முதல் கணவரை பார்த்துக்கொள்ளும் வகையில் தனது மகளை முதல் கணவர் வீட்டிற்கு சிறுமியின் தாய் அனுப்பியுள்ளார். இதனால் சிறுமி தனது தந்தையை கவனித்துக் கொண்டு, கோடம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். வயதுக்கு வந்த சிறுமி என்பதால் பாதுகாப்பு கருதி அவரது தந்தை தனது சகோதரி வீட்டில் தங்க வைத்தார். அதன்படி சிறுமியும் பள்ளியில் படித்தபடி தனது தந்தையை பார்த்துக் கொண்டு வந்தார்.
சிறுமி அழகாக இருந்ததால், அவரது அத்தை, தனது அண்ணன் மகளுக்கு துணிகள் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்கி கொடுத்து தன் வசப்படுத்தினார். இதனால் சிறுமி அவரது அத்தை அழைத்து செல்லும் இடங்களுக்கு உடன் செல்வது வழக்கம். அப்போது கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 4வது கிராஸ் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த்(எ)கோடம்பாக்கம் ஸ்ரீ(54) என்பவரை, சிறுமியின் அத்தை அடிக்கடி சந்தித்து, அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். கோடம்பாக்கம் ஸ்ரீ அகில இந்திய இந்து மகாசபா அமைப்பின் தலைவராக உள்ளார்.
ஒவ்வொரு வாரமும் கோடம்பாக்கம் ஸ்ரீக்கு சிறுமியின் அத்தை இளம் பெண்களை வாடிக்கையாளராக அனுப்புவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு நாள், தனது சகோதரன் மகளான 13 வயது சிறுமியுடன் கோடம்பாக்கம் ஸ்ரீயை அவரது அலுவலகத்தில் சந்திக்க சென்றுள்ளார். அப்பொழுது கோடம்பாக்கம் ஸ்ரீ, ‘யார் இந்த சிறுமி மிகவும் அழகாக இருக்கிறாள். இத்தனை நாட்கள் இவளை ஏன் என் கண்ணில் காட்டாமல் வைத்திருந்தாய்’ என்று கேட்டுள்ளார்.
அதற்கு சிறுமியின் அத்தை ‘சிறுமியை உங்களிடம் அறிமுகம் செய்து வைக்கத்தான் அழைத்து வந்தேன்’ என கூறியுள்ளார். உடனே கோடம்பாக்கம் ஸ்ரீ, வழக்கமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுக்கு சிறுமியை அழைத்து வா என்று கூறியுள்ளார். அதன்படி சிறுமியை அவரது அத்தை கோடம்பாக்கம் ஸ்ரீ உடன் ரிசார்ட்டில் ஒன்றாக இருக்க வலியுறுத்தியுள்ளார். அதற்கு சிறுமி எனக்கு பயமாக இருக்கிறது. நான் மாட்டேன் என்று கூறிவிட்டார்.
உடனே அவரது அத்தை, சிறுமியை சமாதானப்படுத்தி வடபழனி, வேளச்சேரியில் உள்ள மால்களுக்கு அழைத்து சென்று புதிய துணிகள், அழகு சாதனை பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்கி கொடுத்து ‘அவருடன் நீ ஒன்றாக இருந்தால், இதுபோல் உனக்கு நான் அடிக்கடி வாங்கி தருவேன்’ என்று கூறி தன் வசப்படுத்தியுள்ளார். பிறகு சிறுமி ஆடம்பர பொருட்களை பார்த்ததும், அத்தையின் பேச்சை கேட்டு கோடம்பாக்கம் ஸ்ரீ உடன் இருக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, சிறுமியை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்து சென்று, கோடம்பாக்கம் ஸ்ரீ தங்கியுள்ள அறைக்கு சிறுமியை தனியாக அனுப்பினார். அப்போது கோடம்பாக்கம் ஸ்ரீ, 13 வயது பள்ளி சிறுமி என்று தெரிந்தும், அவருடன் உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார். ஆனால் சிறுமி அலறியுள்ளார். உடனே கோடம்பாக்கம் ஸ்ரீ சிறுமியை சமாதானம் செய்து குளிர்பானத்தில் போதை மாத்திரை கொடுத்துள்ளார். சிறுமி அரை மயக்கத்தில் இருந்த போது கோடம்பாக்கம் ஸ்ரீ கொடூரமாக சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால் சிறுமிக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் சிறுமியை கோடம்பாக்கம் ஸ்ரீக்கு ரொம்ப பிடித்ததால், ஒவ்வொரு வாரமும் சிறுயை அவரது அத்தை உதவியுடன், ரிசாட்டுக்கு அழைத்து சென்று கோடம்பாக்கம் ஸ்ரீ மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சிறுமி நான் இனி கோடம்பாக்கம் ஸ்ரீயுடன் செல்லமாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார்.
அதற்கு அவரது அத்தை மற்றும் கோடம்பாக்கம் ஸ்ரீ ஆகியோர் சிறுமியிடம் இதை வெளியில் சொன்னால் உனது குடும்பத்தை அழித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி சிறுமி தனது அத்தை கூறியபடி நடந்துள்ளார். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கோடம்பாக்கம் ஸ்ரீ கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமியை மதுபானம் மற்றும் போதை பொருட்கள் கொடுத்து தனது இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி உடல் நிலையை கருத்தில் கொண்டு வேலூரியில் உள்ள தனது தாயிடம் சென்றுவிட்டார்.
இந்நிலையில், சிறுமியின் பாட்டி இறந்துவிட்டார். இதனால் சிறுமி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரது தந்தை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது அத்தை ‘சொத்தில் பங்கு கேட்டு வந்தாயா?’ என கேட்டு சிறுமியிடம் தகராறு செய்துள்ளார். நான் செல்வதை கேட்மாமல் தாயிடம் ஓடிப்போன உனக்கு இங்கு என்ன வேலை என்று மிரட்டியுள்ளார். அதற்கு சிறுமி எனது பாட்டி இறப்பு நிகழ்ச்சிக்கு தான் வந்து இருக்கிறேன். நீ யார் என்னை தடுப்பதற்கு என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த அவரது அத்தை, சிறுமியிடம் ‘நீ யார் யாருடன் ஒன்றாக இருந்தாய் என்ற வீடியோ என்னிடம் உள்ளது. அதை சொந்தக்காரர்களுக்கு பரப்பி உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி, அங்கிருந்து தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். பிறகு நடந்த சம்பவத்தை தனது தாயிடம் அழுதுகொண்டு கூறியுள்ளார். அப்போது என்னை போல் பல சிறுமிகளையும் அத்தை கோடம்பாக்கம் ஸ்ரீக்கு அனுப்பியுள்ளார். அவர்களுடன் நானும் பல நாட்கள் சென்று வந்தேன் என்றும் கூறியுள்ளார்.
அதை கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். உடல் நலம் பாதித்த தந்தையை பார்த்துக்கொள்ளத்தானே உன்னை அனுப்பினேன். இப்படி உன் வாழ்க்கையை அவள் அழித்து விட்டாளே என்று அழுதுள்ளார். இதை இப்படியே விட்டால் உனது எதிர்காலம் கேள்விக்குறியாகும். இதை வைத்து மீண்டும் உன்னை தவறான பாதைக்கு அழைத்து சென்றுவிடுவாள் என கூறி, என்னை வேலூரியில் இருந்து அழைத்து வந்து புகார் அளித்தார் என சிறுமி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் அவர் பல முறை அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்திருந்தது உறுதியானது. அதைதொடர்ந்து மாம்பலம் அனைத்து மகளிர் போலீசார் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ(எ) ஸ்ரீகாந்த் மற்றும் சிறுமியின் அத்தை மீது 5(1) 5(என்), ஆர்டபிள்யு6(1), ஆர்டபிள்யு 17 போக்சோ சட்டம் மற்றும் 3(2),(வி),3(1),(டபிள்யு)(1) எஸ்சி/எஸ்டி சட்டம் ஆகிய பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்தனர்.
அதைதொடர்ந்து போலீசார் நேற்று அதிரடியாக கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள வீட்டில் வைத்து கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் அவரது தோழியான சிறுமியின் அத்தையை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அத்தை மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியை போன்று பல சிறுமிகளை கோடம்பாக்கம் ஸ்ரீ ரிசார்ட்டுக்கு அழைத்த சென்று உல்லாசமாக இருந்து வந்தது தெரிந்தது.
கைது செய்யப்பட்ட பெண்ணின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் யார் யார் என்பது குறித்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் அவரது தோழி வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறுமி பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ மீது ஏற்கனவே தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு, அலுவலகத்தில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு ஆகியவை நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.