Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் சங்கம் அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் சங்கம் அறிவித்துள்ள கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 5500 லாரிகள் மூலம் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு எல்பிஜி கேஸ் விநியோகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்றது. கூட்டத்தில், 2025-2030ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தில் ஆயில் நிறுவனங்கள் பல்வேறு புதிய விதிமுறைகளை வித்துள்ளன. குறிப்பாக 3,500 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 2,800 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, சுங்க கட்டணங்கள் தொடர்பாக ஆயில் நிறுவனங்கள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்படவில்லை. இந்த நிலுவை தொகைகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்திற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்த வேலை நிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என்று உத்தரவிடக்கோரியும், போரட்டத்திற்கு தடை விதிக்க கோரியும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் அனுப் குமார் சமந்த்ராய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், டேங்கர் லாரி வேலை நிறுத்தம் காரணமாக எல்பிஜி கேஸ் நிரப்பும் ஆலைகளின் பணிகள் பாதிக்கப்படும். கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படும். பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும். எல்பிஜி கேஸ் என்பது அத்தியாவசிய பொருள், அதை விநியோகம் செய்ய விடாமல் தடுப்பது அத்தியாவசிய பொருள் சட்டத்தின் படி சட்டவிரோதமானது. எனவே, சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் அறிவித்துள்ள கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். அத்தியாவசிய பொருள் சட்டத்தின் படி சமையல் கேஸ் டேங்கர் லாரிகளை இயக்க அதன் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.