சென்னை: வங்கக் கடலில் வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வடதமிழகத்தில் அனேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில், வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. வட மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநிலை 17ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.