குறைந்த சீட்டுக்கு இணங்கினால்தான் கனி சின்னம் என ரகசிய பேரம் நடப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளை அதிகாரிகள் பந்தாடுறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கோவை மதுக்கரை பேரூராட்சியாக இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்தாங்களாம்.. இந்த திட்டத்தின் மூலம் அரசு சார்பில் 5 தவணையாக ரூ.2.20 லட்சம் பணம் வழக்கப்படுகிறது. இதில் பெரும்பாலானோருக்கு முதல் தவணை கிடைத்துள்ளதாம்.. அதன்பின்னர், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் மீதி தவணை பணம் பயனாளிகளுக்கு சென்றடையவில்லையாம்..
இதுபற்றி பயனாளிகள், மதுக்கரை நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டிருக்காங்க.. ஆவணங்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட வாரியம் வசம் சென்று விட்டதால் எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு பதில் சொல்லி இருக்காங்க.. அந்த அதிகாரிகளை சந்திச்சு பயனாளிகள் கேட்டபோது, மதுக்கரை நகராட்சி நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு எந்த ஆவணங்களும் வரலைன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்களாம்.. இப்படி மாறி மாறி இழுத்தடிப்பதால், பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை கிடைக்காம பரிதவிச்சிட்டு இருக்காங்களாம்..
இதற்கெல்லாம் காரணம், நகராட்சியில் வேலை செய்யற இளநிலை உதவியாளர் ஒருவர் தான் காரணம்னு சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தைலாபுரத்துக்காரரின் கூட்டத்தை பிசுபிசுக்க வைக்க பனையூர்காரர் திட்டம் போட்டு செயல்படுகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தைலாபுரத்துக்காரருக்கும், பனையூர் மகனுக்கும் இடையேயுள்ள உறவு முற்றிலும் முறிந்து போனதாகி விட்டதாம்.. மகனுக்கு தந்தையும், தந்தைக்கு மகனும் நேரடி பதில் கொடுத்துக் கொண்டே இருந்தாங்களாம்..
அதே நேரத்தில் பனையூர்காரருக்கு கட்சியில் யாரும் பதில் சொல்ல முடியாத நிலை இருந்ததாம்.. அதோடு அக்கட்சியில் உயர்ந்த இடத்திற்கு வந்தவர்கள் எல்லோர் மனதிலும் தோட்டத்துக்காரர் தான் இருக்காராம்.. ஆனால் அதை வெளியே சொல்லி ஆதரவு தெரிவிக்க யாருக்கும் தில் இல்லையாம்.. தந்தையும் மகனும் இன்று மோதிக்கொள்வார்கள், நாளை சேர்ந்து கொள்வார்கள்.. இதற்கிடையில் யாருக்காவது ஆதரவை தெரிவித்து ஆப்பசைத்த கதையாகி விட கூடாது என்ற எண்ணத்துடன ஒதுங்கியே இருக்காங்களாம்..
ஆனால் மாங்கனி எம்எல்ஏ மட்டும் தைரியமாக பனையூர்காரருக்கு பதில் சொல்றாராம்.. இதற்கு தைலாபுரத்துக்காரர் அனுமதி கொடுத்திருக்காராம்.. எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.. சுடசுட பதில் சொல்லிக்கொண்டே இரு எனவும் பச்சைக்கொடி காட்டியதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதனை பயன்படுத்திக்கிட்டு பதிலை உக்கிரமாக சொல்றாராம் அந்த எம்எல்ஏ.. இதனால் ஒட்டுமொத்த கட்சியும் சேலம் பக்கம் திரும்பியிருக்காம்.. அதே நேரத்தில் கோபத்தின் உச்சத்தில் இருக்காராம் பனையூர்காரர்..
இவருக்கு சரியான பதிலடி கொடுக்க பனையூர்காரர் அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுது.. அந்த எம்எல்ஏ எந்த பக்கம் சென்றாலும் சுற்றிவளைக்கும் வகையிலும் வேலைகள் நடந்துக்கிட்டிருக்காம்.. இதற்கிடையில் மாங்கனி மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தை தைலாபுரத்துக்காரர் கூட்டியிருக்காராம்.. இதுதொடர்பாக ஆலோசனை கூட்டத்துக்கு சென்ற எம்எல்ஏவை ஒழிக கோஷம் போட்டு ஷாக் கொடுத்திருக்காங்களாம்.. இவ்வாறு ஆங்காங்கே எதிர்ப்பு கிளம்பினால் பயத்தை ஏற்படுத்திவிடலாமுன்னும் நினைக்கிறாங்களாம்..
அதோடு தைலாபுரத்துக்காரருக்கு வரும் கூட்டத்தை பிசுபிசு வைக்க திட்டம் போட்டு செயல்படுவதாக சொல்றாங்க.. எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைப்போமுன்னு எம்எல்ஏ தரப்பு நெஞ்சை நிமிர்த்தி சொல்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தீபாவளி செலவு கண்ணை கட்டிய நிலையில் வயலுக்குள் வெள்ளம் பாய்ந்தது பலாப்பழக்காரரை பரிதவிப்பில் தள்ளியிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் ஹனிபீ மாவட்டத்தின் முல்லையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கு.. பலாப்பழக்காரரின் இரண்டு எழுத்து தொகுதியில் பெரும்பாலான இடங்களில் வயல்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பல நூறு ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெல்மணிகள் யாருக்கும் பயன்படாத வகையில் நாசமாகி விட்டதாம்.. இந்த தகவலை ஆதரவாளர்கள் பலாப்பழக்காரரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ‘எலக்ஷன் வருதுண்ணே... பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி கொடுத்துருவோம்’ என்று ஐடியா ெகாடுத்திருக்காங்க..
‘இப்ப தான தீபாவளி செலவு முடிஞ்சிருக்கு... அதுக்குள்ள அடுத்த செலவா...’ என்று யோசித்த பலாப்பழக்காரர், சற்று சிந்தித்து.... போகாமல் இருந்தாலும் சரியாக இருக்காது, சரி தலையைக் காட்டிட்டு வந்திடுவோம் என்று முடிவு செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விசிட் அடித்திருக்கிறார். இதையறிந்த மற்ற பகுதி மக்கள் பலாப்பழக்காரரை சூழ்ந்து கொண்டனராம்.. தொகுதி முழுக்க பாதிப்பு தான், எல்லா பகுதியையும் வந்து பாருங்க என நேரடியாகவே கூறிட்டாங்களாம்..
அப்படியே அவரும் போய் மேலும் சில இடங்களை பார்க்க, சும்மா வந்து பார்த்தால் எப்படி, சொந்த தொகுதி மக்கள் பாதிக்கும் போது நிவாரண உதவிகள் தரக்கூடாதா என கேட்டிருக்காங்க.. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பலாப்பழக்காரர், ‘இதுக்குத்தான் அப்பவே யோசிச்சேன்...’ என்று முணுமுணுத்தபடி மெதுவாக அங்கிருந்து நழுவினாராம்.. தொகுதிக்குள் இருந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக பார்க்கவில்லை, பார்த்த இடத்திலும் எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்ற விமர்சனம் தொகுதி முழுக்க ஒலிக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கனி சின்னத்தை வைத்து சீட்டை குறைக்க மலராத கட்சி ரகசிய பேரம் நடத்தியிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்கனி கட்சியில் கூட்டணி பேச்சு தொடங்கி இருக்காம்.. மலராத கட்சியும், இலையும் ரகசிய சந்திப்புகளை நடத்தி வருகிறதாம்.. தந்தை, மகன் இருவரில் சின்னம் யாருக்கு என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில் இருவரிடமும் தூது செல்கிறார்களாம்.. இதனால்தான் அன்பு மகன் தனிக்கட்சி ஆரம்பிக்கட்டும் என தந்தை அடிக்கடி கூறி வருகிறாராம்.. ஆனால் மகனோ கனியில்தான் போட்டி என்பதில் உறுதியாக உள்ளாராம்..
இதற்கான காய்களையும் திரைமறைவில் நகர்த்துகிறாராம்.. இதன் எதிரொலியாக சமீபத்தில் மலராத கட்சியின் பொறுப்பு நிர்வாகி ஒருவர், அன்பு மகனை ரகசியமாக சந்தித்தாராம்.. அவரிடம் 30 சீட் என கண்டிஷன் போட்டாராம். இதனால் மாற்றாக தந்தையையும் சந்தித்து முதல்கட்ட அச்சாரம் போட்டுள்ளாராம்.. நடிகரின் கட்சியையும் என்டிஏவில் சேர்க்கும் திட்டம் ெடல்லிக்கு இருப்பதால் சீட் பங்கீடு இப்போதே விஸ்வரூபம் எடுத்துள்ளதாம்..
தனது தலைமையில் கட்சி வெற்றி நடைபோடவில்லை என்ற அவப்பெயரை துடைத்துவிட வேண்டுமென்பதில் மகன் இருக்க, இனி நமக்கு வெற்றி கிரீடம் தான் என தந்தை கூறி வர யார் மலராத கட்சிக்கு குறைந்த சீட்டுக்கு இணங்கி வருகிறார்களோ அவர்களுக்கே கனி சின்னம் கிடைக்கும் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் உலாவுதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
