டெல்லி: தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நீடித்து வந்த கோடை வெயிலின் வெப்பம் படிப்படியாக குறைந்து இயல்பு நிலையை ஒட்டி இருக்கிறது. தென் மாவட்டங்களில் நீடித்து வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கோடை மழை பெய்யத் தொடங்கியதால் வெப்பம் தணிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. தென்மேற்கு, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ல் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக் கூடும். இதனால் தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.