அறை எடுத்து தங்கிய காதல் ஜோடிக்குள் தகராறா? வேப்பேரியில் பூட்டிய லாட்ஜில் தூக்கில் தொங்கிய காதலி: சொந்த ஊர் சென்று காதலனும் தற்கொலையால் பரபரப்பு, கொலை செய்துவிட்டு சென்றாரா என போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை அண்ணா நகர் மேற்கு மேல் நடுவண்கரை பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் திரிஷா (20). இவர் அண்ணா நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார். அதே துணிக்கடையில் வேலை செய்து வந்த திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த அலமாதி எடப்பாளையம் அண்ணா தெருவை சேர்ந்த ராபின் (23) என்பவருடன் திரிஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த தகவல் இரு வீட்டாருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் தெரியவந்தது. பிறகு இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, திருமணத்திற்கான வேலைகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதல் ஜோடிகள் இருவரும் வேப்பேரி பகுதியில் நேற்று முன்தினம் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராபின் தன்னுடன் கடையில் வேலை செய்யும் திரிஷாவின் தோழி ஸ்வேதா என்பவரை தொடர்பு கொண்டு, ‘நாங்கள் இருவரும் அறை எடுத்து தங்கினோம். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
நான் திரிஷாவை அறையில் வைத்து பூட்டிவிட்டு எனது வீட்டிற்கு வந்துவிட்டேன். திரிஷா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும் தானும் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் கூறி இணைப்பை ராபின் துண்டித்துவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்வேதா வேப்பேரியில் உள்ள லாட்ஜிக்கு வந்து மேலாளர் உதவியுடன் திரிஷா தங்கியுள்ள அறை எண் 103 கதவை மாற்று சாவி மூலம் திறந்து பார்த்த போது, திரிஷா சந்தேகத்திற்கு இடமான வகையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து ஸ்வேதா வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் திரிஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம் திரிஷா உடல் மீட்கப்பட்ட லாட்ஜ் அறையின் வெளிப்புறம் பூட்டப்பட்டு சாவி காதலன் ராபின் எடுத்து சென்றதால், போலீசார் ராபின் மீது சந்தேகமடைந்து அவரை, தொடர்பு கொண்ட போது, திருவள்ளூர் மாவட்டம் கீச்சலம் காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் ராபின் அவரது அம்மா சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனும் தற்கொலை செய்து கொண்டதால் குழப்பமடைந்த போலீசார், திரிஷா பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், காதலன் ராபின், திரிஷாவை கொலை செய்து விட்டு, உடலை தூக்கில் தொங்கவிட்டு சென்றாரா அல்லது திரிஷா தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே திரிஷா மற்றும் ராபின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.