அய்யா என்ன எக்ஷிபிஷனா.. நாடகமாடிட்டு இருக்கீங்க.. அய்யாவுக்கு ஏதாவது ஆச்சுனா.. தொலைச்சிடுவேன்..! அன்புமணி ஆவேசம்
சென்னை: அய்யாவை வெச்சு டிராமா பண்ணிட்டு இருக்கீங்க... அய்யாவுக்கு ஏதாவசு ஆச்சுனா.. தொலைச்சிடுவேன் என நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ஆவேசமாக பேசினார். பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 6ம் தேதி காலை அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதனையடுத்து ராமதாஸ் உடல்நிலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று உடல்நிலையை கேட்டறிந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிவடைந்ததையடுத்து ராமதாஸ் கடந்த 7ம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில், இது சம்பந்தமாக நேற்று பனையூரில் பாமக நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி பேசியதாவது: அய்யா உடல்நிலை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சோதனை செய்ததில் ஒன்றும் இல்லை. சிலர் போன் செய்து அய்யாவிற்கு உடம்பு சரியில்லை வந்து பாருங்கள் என அழைத்துள்ளனர். ரொம்ப அசிங்கமா இருக்கு, ராமதாசை வெச்சி டிராமா பண்றீங்களா.. அய்யாவுக்கு 87 வயசு ஆகுது. செக்அப் செய்ய போயிருக்கார். அப்போ ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரி நேரத்துல, எந்த இன்பெக்ஷனும் ஏற்படக்கூடாது. ஆனா யார் யாரோ உள்ளே வந்து பாத்துட்டு போகிறார்கள். வந்து பாருங்கள், வந்து பாருங்கள் என கூப்பிடுகிறார்கள்.
அய்யா என்ன எக்ஷிபிஷனா.. அய்யா உயிர் பாதுகாப்பு முக்கியம். நான் இருக்கும் போது காரிடார் பக்கம் கூட யாரையும் விட மாட்டேன். இப்போ கதவை கூட தட்டுவதில்லை. நேராக உள்ளே செல்கிறார்கள். தூங்கவிடுவதில்லை, பாத்ரூமில் இருந்தால் கூடா ஐயா போன் என கொடுக்கிறார்கள். என்னய்யா பண்ணிட்டு இருக்கீங்க அய்யாவை வெச்சுக்கிட்டு. அய்யாவுக்கு ஏதாவுது ஆச்சுனா.. தொலைச்சு போடுவேன். சும்மா இருக்க மாட்டேன். என்ன.. வேடிக்கை பார்க்கிறேன்னு நினைச்சுட்டு இருக்காங்களா. மனசுல அவ்வளவு கோபம் இருக்கு. அய்யாவை வெச்சு டிராமா பண்ணி நாடகம் ஆடிட்டு இருக்காங்க. துப்பு கெட்டவங்க. இவ்வாறு அன்புமணி ஆவேசமாக பேசினார்.