Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு எதிரொலி: இந்தியாவையும், ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம்: டிரம்ப் பதிவால் பரபரப்பு

வாஷிங்டன்: இருண்ட சீனாவிடம் இந்தியாவையும், ரஷ்யாவையும் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அவர்கள் ஒன்றாக நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தைப் பெறட்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்தார்.

இந்த சூழலில் சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீனா அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருடன் பிரதமர் மோடி இணைந்து கலந்து கொண்டார். அவர்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். எதிர்காலத்தில் இணைந்து செயல்பட அவர்கள் முடிவு எடுத்தனர். இந்த சூழலில் இந்தியாவையும், ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டதாகத் தெரிகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் மீடியா தளத்தில் பிரதமர் மோடி-ஜின்பிங்-புடின் மூவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட டிரம்ப்,’ நாம் இந்தியாவையும், ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அவர்கள் ஒன்றாக நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தைப் பெறட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்களன்று, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வைக் குறிப்பிட்டு, இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்ச பேரழிவு என்று டிரம்ப் கூறியிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில்,’ சிலருக்கு மட்டுமே புரிவது என்னவென்றால், நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வணிகத்தைச் செய்கிறோம், ஆனால் அவர்கள் எங்களுடன் மிகப்பெரிய அளவிலான வணிகத்தைச் செய்கிறார்கள்.வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் எங்களுக்கு மிகப்பெரிய அளவிலான பொருட்களை விற்கிறார்கள், அவர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளர் நாங்கள். ஆனால் நாங்கள் இந்தியாவுக்கு மிகக் குறைவாகவே விற்கிறோம். முற்றிலும் ஒருதலைப்பட்ச உறவு, இது பல தசாப்தங்களாக உள்ளது’ என்று கூறியிருந்தார். தற்போது இந்தியாவையும், ரஷ்யாவையும் இழந்து விட்டோம் என்று டிரம்ப் கூறியிருப்பது இந்தியா உறவை இழந்ததால் ஏற்பட்ட பாதிப்பை குறிப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

* அடுத்து புடினுடன் பேசுவேன்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசிய பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நான் பேசுவேன், ஆம். நாங்கள் ஒரு நல்ல உரையாடலைக் கொண்டிருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

* பாதுகாப்புத்துறை இல்லை இனிமேல் போர்த்துறை

அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புத் துறையின் பெயரை மீண்டும் போர்த் துறை என மாற்றுவதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட உள்ளார். அமெரிக்க ராணுவத்தை நிறுவிய அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனால் ராணுவத்தின் நிர்வாக அமைப்பு ‘போர்த் துறை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1947ம் ஆண்டு அதிபர் ஹாரி ட்ரூமன் கொண்டு வந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடற்படைத் துறை, புதிதாக உருவாக்கப்பட்ட விமானப்படைத் துறை மற்றும் போர்த் துறை என அழைக்கப்பட்ட ராணுவத் துறை ஆகிய மூன்றும் ‘தேசிய ராணுவ அமைப்பு’ என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன.

இந்த தேசிய ராணுவ அமைப்பு, 1949ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ‘பாதுகாப்புத் துறை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாதுகாப்புத் துறையின் பெயரை மீண்டும் ‘போர்த் துறை’ என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.