*கலெக்டர் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில் : நாகர்கோவில், கோணம், அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நேற்று தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் அழகுமீனா கலந்துகொண்டு, கட்டுமான தொழிலாளர்களிடையே பேசியதாவது: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில், 54 வகையான கட்டுமான தொழில்களில் பணிபுரியும், பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், வாரியத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்நாடு முழுவதும், பதிவு பெற்ற 50 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து, தொழில் சார்ந்த நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து, அவர்களின் திறனை மேம்படுத்த, அந்தந்த மாவட்டத்திலேயே அரசு தொழில் பயிற்சி நிலையங்களில், பயிற்சிகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள, அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதன்படி கொத்தனார், சித்தாள், தச்சு வேலை, வர்ணம் பூசுதல், கம்பி வளைப்பவர், பிளம்பர், மின்பணி வேலை, சலவைக்கல் ஒட்டுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல் உள்ளிட்ட 11 தொழில் பிரிவுகளின் கீழ், பயிற்சியில் பங்குபெறும் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு ஊதிய இழப்பீட்டுத்தொகையாக ரூ.800 உடன் கூடிய 7 நாட்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
இப்பயிற்சியில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். 11 தொழில் இனங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மஸ்தூர் தொழில் இனத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், மீதமுள்ள 11 தொழில் இனங்களில் ஏதாவது ஒன்றில் பயிற்சி பெறலாம். வரும் 28ம் தேதி வரை, 7 நாட்கள் தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படும்.
அதன் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழும் வழங்கப்படும். எனவே, இம்மாவட்டத்தில் பதிவுபெற்ற அனைத்து கட்டுமான தொழிலாளர்களும், இந்த பயிற்சியில் பங்குபெற்று பயனடையலாம். பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், கோணம் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் பிலிப் ஆல்வின், சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜாகுமார், திறன்பயிற்சி உதவி இயக்குநர் லெட்சுமிகாந்தன் மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.