வெளிநாட்டில் தயாரிக்கப்படும் லாரிகளுக்கு 25% வரி விதிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு; இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அவரது பல வர்த்தக முடிவுகள் உலகளாவிய பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் அதிக வரிகளை விதிக்கிறார். உலகிலேயே அதிகபட்சமாக வரி விதிப்பது இந்தியா தான் என குற்றம்சாட்டிய டிரம்ப், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார்.
இதன் காரணமாக இந்திய ஜவுளி உள்ளிட்ட துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய நிறுவனங்களின் அமெரிக்க ஏற்றுமதி வெகுவாக குறைந்து வருகிறது. இதுதவிர, அமெரிக்க சந்தைக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகுக்கும் நிலையில், பிராண்டட் மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதித்து கடந்த மாதம் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், எஃகு, அலுமினியம், சில மின்னணு பொருட்களுக்கு 50 சதவீத வரியும், குளியலறை, சமையலறை பொருட்களுக்கும் அவர் வரி விதித்துள்ளார்.
இந்த வரிசையில் தற்போது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த மாதமே இந்த வரியை அறிவித்து, அக்டோபர் 1 முதல் அமல்படுத்த டிரம்ப் திட்டமிட்டிருந்தார். ஆனால், விலைவாசி உயர்வு, விநியோக சங்கிலியில் பாதிப்பு குறித்து இத்தொழில் துறையினர் கவலை தெரிவித்திருந்ததால், வரி விதிப்பை ஒத்திவைத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் தனது சமூக ஊடகத்தில் இதற்கான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.
அவர் தனது பதிவில், ‘‘அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர, கனரக லாரிகளுக்கு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும். நியாயத்தை மீட்டெடுக்கவும் அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்கவும் இந்த வரி அவசியமாகிறது. நியாயமற்ற நடைமுறைகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக் தொழில்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது’’ என கூறி உள்ளார்.
ஆனால் டிரம்பின் இந்த வரி விதிப்பு இந்தியாவை குறிவைத்து விதிக்கப்படவில்லை. ஏனெனில், இந்திய நிறுவனங்கள் அமெரிக்க சந்தைக்கு இதுபோன்ற லாரிகளை ஏற்றுமதி செய்வதில்லை. இதனால் இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு எந்த நேரடி பாதிப்பும் ஏற்படாது.
அதே சமயம், இந்த வரி விதிப்பால், கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் தாக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வகையில் வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் லாபர் 15 முதல் 20 சதவீதம் வரை குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய கனரக வாகனங்கள் பெருமளவில் ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
* மெக்சிகோவுக்கு அதிக பாதிப்பு
மெக்சிகோ, கனடா, ஜப்பான், ஜெர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளே அதிகளவில் லாரிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இதில் மெக்சிகோ மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. அந்நாடு கடந்த 2019 முதல் தனது ஏற்றுமதியை 3 மடங்கு அதிகரித்து 3.4 லட்சம் நடுத்தர, கனரக லாரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வருகிறது.