சென்னை: ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் ரகசிய அறை அமைத்து, ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஓட்டுநர் உள்பட 2 பேரை தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பணியக பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு அதிகளவில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை மண்டல தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், செங்குன்றம் நல்லூர் அருகே உள்ள காரனோடை சுங்கச்சாவடியில் தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த லாரி ஒன்றை மறித்து சோதனை செய்த போது, லாரியின் பாடியில் வழக்கத்திற்கு மாறாக ஒரு அடி உயரத்திற்கு பாடி கட்டமைப்பு இருந்தது. இதனால், அதிகாரிகள் லாரியின் பாடியை ஆய்வு செய்த போது, அதில் ரகசிய அறை ஏற்படுத்தி, அதில் 150 பொட்டலங்களாக 320 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே லாரி ஓட்டுநர் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கஞ்சா கடத்துவதற்காக லாரியில் பிரத்யேகமாக ரகசிய அறை ஏற்பாடு செய்து, கஞ்சா கடத்துவதற்காக லாரியின் பதிவு எண் மற்றும் பாஸ்ட் டேக் போலியாக தயாரித்து தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்று அங்கிருந்து கஞ்சா கடத்தியதும், கடத்தலில் பெரிய கஞ்சா கும்பலுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட 320 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.2 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இருவரை கைது செய்து, இதில் தொடர்புடை நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.